ஃபோலட்டின் டெட்ராலஜி என்றால் என்ன?
ஃபோலட்டின் டெட்ராலஜி என்பது பிறவியிலேயே இதயத்தில் ஏற்படக்கூடிய நான்கு குறைபாடுகளின் சேர்க்கையாகும், இதன் விளைவால் மோசமான ஆக்ஸிஜன் உள்பொருளை கொண்ட இரத்தம் உடல் முழுவதும் பாய்கின்றது. இந்நிலையை விளைவிக்கக் கூடிய நான்கு குறைபாடுகள் பின்வருமாறு:
- கீழறை செப்டல் குறைபாடு (விஎஸ்டி), என்பது வலது மற்றும் இடது இதயக்கீழறைகளின் பிணைப்பில் ஏற்படும் குறைபாடுள்ள நிலையாகும் (இதயத்திலிருக்கும் அறைகள்).
- வலது இதயக்கீழறை தடிமனாக இருத்தல்.
- இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு.
- பெருநாடி தவறாக அமைந்திருத்தல் (உடலின் முக்கியமான தமனி).
இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தமின்மையின் காரணத்தினால் சருமத்தில் ஏற்படும் நீல நிறச்சாயலே ஃபோலட்டின் டெட்ராலஜி நோய்வாய்பட்டவர்களிடத்தில் காணப்படும் பெரும்பாண்மையான அறிகுறியாகும். இந்நிலைக்கான மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- கிளப்டு ஃபிங்கர்ஸ் (விரல்களின் நுனி பகுதி தடிமனாக இருத்தல்).
- தீடீரென அடிக்கடி மயங்கி விழுதல்.
- தீடீரென தோலில் ஏற்படும் கடுமையான நீல நிறமாற்றம்.
- குறைவான செய்கைகளுக்கு எளிதில் சோர்வடைதல்.
- பலவீனம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஃபோலட்டின் டெட்ராலஜி வளர்ச்சிக்கான சரியான காரணம் இன்னும் புலப்படவில்லை, ஆனால் இந்நிலைக்கு வழிவகுக்ககும் அறிவுறுத்தக்கூடிய காரணங்கள் பின்வருமாறு:
- மகப்பேறுக்கு முந்திய காலத்தில் உட்கொள்ளும் மோசமான உணவு பழக்கத்தினால் குழந்தை இதய குறைபாடுடன் பிறத்தல் விளைகின்றது.
- ஃபோலட்டின் டெட்ராலஜி வளர்ச்சிக்கு நீரிழிவு நோய் ஒரு காரணியாக கருதப்படுகின்றது.
- டவுன் சிண்ட்ரோம் உடைய குழந்தைகள் இந்நிலையினால் எளிதில் பாதிக்கப்படுவர்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
அசாதாரணமான இதயத் துடிப்பை கொண்ட குழந்தைக்கு ரெகுலர் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் ஃபோலட்டின் டெட்ராலஜி கண்டறியப்படுகிறது. குழந்தை பிறக்கும் தருவாயில், பிறந்த குழந்தையின் சருமத்தின் நிறம் நீலமாக தோன்றினால், மருத்துவர் சில டெஸ்ட்களை செய்யுமாறு உத்தரவிடுவார். பொதுவாக இந்நிலையை உறுதிப்படுத்த செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் பின்வருமாறு:
- இதயத்தை சோதனை செய்வதற்கு காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ).
- மார்பை சோதனை செய்யும் எக்ஸ்ரே.
- இதயத்தின் அமைப்பு அல்லது செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க எக்கோகார்டியோகிராம்.
இதய அறுவை சிகிச்சை செய்தலே இந்நிலையினால் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்யக்கூடிய ஒரே சிகிச்சையாகும். குழந்தை மிகவும் பலவீனமாக இருந்தால், குழந்தை அறுவை சிகிச்சைக்கு தயாராவதற்கு தேவையான ஆரோக்கியத்தை பெரும் வரை இந்த குறைபாடுகளுக்கான தற்காலிக சிகிச்சை செய்யப்படும். வழக்கமாக இந்நிலைக்குரிய அறுவை சிகிச்சை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே செய்திடல் வேண்டும், ஏனெனில் சிகிச்சை செய்ய தவறிவிட்டால் இதய இசைவில் தொந்தரவு, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் தாமதமான உடல் வளர்ச்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.