தொண்டை அழற்சி என்றால் என்ன?
தொண்டை அழற்சி என்பது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீனஸ் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தொற்று ஆகும், இதனால் தொண்டையில் வலி, வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.எந்தவொரு வயதினரையும் இது பாதிக்கலாம் என்றாலும், குழந்தைகளில் இது மிகவும் பொதுவானது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- தொண்டை அழற்சி என்பது தொண்டையில் வலி மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது.இந்த வலி குறிப்பாக விழுங்குதல் அல்லது சாப்பிடும் போது மோசமடைகிறது, மேலும் அதனுடன் அரிப்பும் ஏற்படுகிறது; எனினும், இருமல் வருவதில்லை.
- அடிநாச்சதை சிவந்தும் வீங்கியும் இருக்கும்.மேலும் கழுத்தில் உள்ள நீணநீர்க்கணுக்கள் வீங்கி இருக்கும்.
- இந்த தொற்று காரணமாக காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம் ஏற்படுகின்றன.
- சோர்வு, தலைவலி மற்றும் சளி ஏற்படலாம்.
- பசியின்மை, குமட்டல், வாந்தி ஆகியவை வேறு சில பொதுவான அறிகுறிகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- பிரிவு ஏ ஸ்ட்ரேப்டோகாக்கஸ் இனத்தை சேர்ந்த ஸ்ட்ரேப்டோகாக்கஸ் பயோஜீனஸ் பாக்டீரியாவால் தொண்டை அழற்சி ஏற்படுகிறது.
- இந்த தொற்று இருமல் அல்லது தும்மலால் வெளிப்படும் எச்சில் துளிகளால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.
- நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடைய தனிப்பட்ட பொருட்களைத் தொடுவது அல்லது பகிர்வது போன்ற நெருங்கிய தொடர்பு நடவடிக்கைகள் உங்களுக்கு தொண்டை அழற்சி நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
- தொண்டை அழற்சி நோய்த்தொற்று, மற்ற நுண்ணுயிர் தொற்றுக்களைப் போன்ற வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது.ஆய்வக சோதனை மூலம் பாக்டீரியாவை கண்டுபிடிப்பதற்கு தொண்டை ஸவாப் மூலமாக செய்யப்படும் ரேபிட்-ஸ்ட்ரேப் சோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
- நோய்த்தொற்று மற்றும் பிற நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சிகிச்சை முறைகள்:
- தொண்டை அழற்சி நோயின் முதன்மை சிகிச்சை நுண்ணுயிர்க்கொல்லிகள் (ஆன்டி-பயாட்டிக்குகள்) ஆகும்.பாக்டீரியாவை முற்றிலுமாக அழிக்க நுண்ணுயிர்க்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்ட நேரங்களில் தவறாமல் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- வலி அல்லது காய்ச்சல் இருந்தால், வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டி-பைரடிக்) வழங்கப்படும்.
- மருந்தை பரிந்துரைக்கப்பட்ட முறையில் உட்கொள்ளாவிட்டால் அல்லது பாக்டீரியா மருந்திற்கு எதிராக எதிர்ப்புத்திறனை பெற்றுவிட்டால், தொண்டை அழற்சி மீண்டும் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.