பீதி தாக்குதல் மற்றும் கோளாறு என்றால் என்ன?
பீதி தாக்குதல் மற்றும் கோளாறு என்பது ஒரு வகையான பதற்றக் கோளாறு ஆகும்.இதனால் நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் சில சூழ்நிலைகளில் அல்லது குறிப்பிட்ட பொருளை அல்லது நபரை பார்க்கும் போது ஒருவித பயம் கலந்த பேரச்ச உணர்வை தங்களது ஆழ் மனதிலிருந்து வெளிப்படுத்துகிறார்கள். பீதி தாக்குதல் பிரச்னையை எதிர்கொள்ளும் போது, ஒரு நபர் அவரது இயல்பான பிரதிபலிப்பு மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாதவர்களாக உணர்கிறார்கள்.தீவிர மன அச்சத்தின் நிகழ்வு பீதி தாக்குதல் என அழைக்கப்படுகிறது.ஆனால் ஒருவர் இந்த பீதி தாக்குதலை நீண்ட காலத்திற்கு எதிர் கொள்ளும் போது, அது மருத்துவ ரீதியாக பீதி தாக்குதல் கோளாறு எனக் குறிப்பிடப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பீதி தாக்குதலின் போது, ஒருவர் எதிர்கொள்ளும் உளவியல் அறிகுறிகள் பின்வருமாறு:
- தீவிர பதற்றம்.
- தீவிர பயம்.
- மன அழுத்தம் மற்றும் கவலை.
- தனிமையாக இருக்க விரும்புதல் மற்றும் யாரேனும் அவர்களை தொடுவதை தவிர்த்தல்.
பீதி தாக்குதல் பொதுவாக பின்வரும் உடல் சார்ந்த அறிகுறிகளுடன் இணைந்து காணப்படுகிறது:
- வேகமான இதய துடிப்பு (மேலும் வாசிக்க: இதயத் துடிப்பு மிகைப்பிற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை).
- நெஞ்சு வலி.
- சுவாசிப்பதில் சிரமம்.
- அதிகமாக வியர்த்தல்.
- தலைச்சுற்றல்.
- பலவீனம்.
- வயிற்று வலி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பீதி தாக்குதல் கோளாறு என்பது அதிக அளவிலான மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்படும் விளைவாகும்.எனினும், இது மருத்துவ ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு உளவியல் சார்ந்த நிலைமையாகும்.ஒரு குறிப்பிட்ட அளவிலான மன அழுத்தத்தின் பிரதிபலிப்பு நபருக்கு நபர் வேறுபடுகிறது.பொதுவாக, ஒருவர் நீண்ட காலத்திற்கு தீவிர பதற்றம் அல்லது மன அழுத்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது இந்த பீதி தாக்குதல் கோளாறு நாளடைவில் உருவாகிறது.
பெரும்பாலானவர்களில், ஒரு குறிப்பிட்ட உந்துதல் அல்லது தூண்டுதல் இந்த பீதி தாக்குதல் கோளாறை உருவாக்குகிறது.உதாரணமாக, சில நபர்களில் பீதி தாக்குதல் கூட்ட நெரிசல் உள்ள சூழ்நிலைகள் காரணமாகவும் ஏற்படக்கூடும்.பீதி தாக்குதல் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் மாறுபடுகின்றன.இந்த கோளாறு நேசித்த ஒருவரின் இழப்பினாலோ, சுய தீங்கு அல்லது நேசிக்கப்பட்ட ஒருவரால் ஏற்படும் அச்சுறுத்தலினாலோ அல்லது பெரிய அளவில் ஏற்படும் நிதி இழப்பினாலோ அல்லது இது போன்ற பல காரணங்களினால் உருவாகலாம்.
இருப்பினும், எச்சரிக்கை ஏதும் இல்லாமல் கூட இந்த பீதி தாக்குதல் கோளாறு ஏற்படலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்த கோளாறு மனநல சுகாதார நிபுணர்,பெரும்பாலும் ஒரு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரால் மருத்துவ ரீதியாக கண்டறியப்படுகிறது.பீதி கோளாறு பிரச்சனையால் ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்த தளர்வு பயிற்சிகள் மற்றும் சுவாச பயிற்சிகள் மூலம் பெரும்பாலும் இதன் அணுகுமுறை கையாளப்படுகின்றன.மன அழுத்தத்திலிருந்து விடு பெற, தொழில் சார்ந்த ஆலோசனை மற்றும் அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை முறை கூட செய்யப்படலாம்.
நோய் மோசமடைந்த சந்தர்ப்பங்களில் மருந்துகள் தேவைப்படலாம்.பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சில பேருக்கு கவலை எதிர்ப்பி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்த பீதி தாக்குதல் கோளாறு பிரச்சனை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு குறைபாடு இல்லை என்பதனை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் ஒருவரின் சுய மரியாதையையும், தன்னபிக்கையையும் இது பாதிக்கிறது.இந்நோயின் அறிகுறிகளை பற்றிய விழிப்புணர்வு, மற்றும் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளித்தால் இந்த பீதி தாக்குதல் கோளாறினால் ஏற்படும் அறிகுறிகளை நிர்வகிக்கலாம்.