பசியின்மை என்றால் என்ன?
பசியின்மை என்பது சாப்பிடுவதற்கான விருப்பம் குறைந்து, பசி ஏற்படாமல் இருக்கும் நிலையே ஆகும். பசியின்மை இருப்பவர்களுக்கு தங்கள் கடைசி உணவிற்குப் பின் பல மணி நேரத்திற்கு பசி எடுக்காது. உணவைப் பற்றிய எண்ணம் அல்லது அதனைப் பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது அல்லது சோர்வாக உணரக்கூடும். பல உடலியல் மற்றும் உளவியல் காரணிகள் பசியின்மையை ஏற்படுத்தக்கூடும். இது தொடர்சியாக இருந்தால், பொதுவாக இது அனோரெக்சியா என்ற நிலையை குறிக்கின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பசியின்மையின் அறிகுறிகள் தெளிவாக காணப்படுகின்றன. உணவுப்பொருட்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களை பார்க்கும் போது அல்லது அதனைப் பற்றி நினைக்கும் பொழுது குமட்டுவது போன்ற உணர்வு இருக்கும். மேலும் பசி எடுக்காது மற்றும் எடை இழப்பு ஏற்படும். பசி இல்லாத போது வலுக்கட்டாயமாக சாப்பிட நேர்ந்தால், சிலர் சாப்பிட்ட பிறகு வாந்தியெடுத்துவிடுவார்கள். பசியின்மை நீடித்திருந்தால், லேசான தலைச்சுற்றல், நிலைதவறி இருத்தல், மயக்கமாக உணர்தல், சுருங்கிய மார்பு, ஒழுங்கற்ற சுவாசம் அல்லது வெப்பநிலை மாற்றங்களுக்கு சகிப்புத்தன்மை இன்மை போன்றவை ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தொடர்ச்சியான சில நிலைமைகள் பசியின்மைக்கு வழிவகுக்கூடும். இது கடுமையான தலைவலி போன்ற சிறு பிரச்சனையாகவோ, அல்லது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயாகவோ இருக்கலாம். கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களும் பசியின்மைக்கு வழிவகுக்கலாம். நோய் அல்லது காயத்தால் ஏற்படும் வலியின் காரணமாக கூட பசியின்மை ஏற்படக்கூடும். பசியின்மை ஏற்படுவதற்கான சில சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:
- ஒற்றைத் தலைவலி.
- நரம்புகளின் சிதைவு.
- அறுவை சிகிச்சைக்கு பின் உள்ள வலி.
- களைப்பு.
- கர்ப்பம்.
- இதய பிரச்சனைகள்.
- மாதவிடாய்க்கு முன் ஏற்படும் நோய்க்குறி.
- சளி.
- மது மற்றும் போதை மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்துதல்.
- சில மருந்துகளின் பக்க விளைவு.
- பதட்டம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம்.
- பசியற்ற உளநோய் அல்லது மிகுதியாக உண்டு வாந்தி எடுத்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகள் பற்றிய ஆய்வு, மருத்துவ பின்புலத்தை அறிதல் மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை முதன்மை நோய் கண்டறிதலுக்கு அடிப்படையாக அமைகின்றன. இதுவே சாத்தியமான சில காரணிகளை மதிப்பீடு செய்வதோடு அதற்கேற்ப பிற பரிசோதனையை பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவுகிறது. தைராய்டு பிரச்சினைகள், எச்.ஐ.வி, புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் இருந்தால், இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். இதயத்தின் எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈசிஜி), வயிற்றின் சி.டி ஸ்கேன் மற்றும் இரைப்பை சோதனைகள் பரிந்துரைக்கப்படக்கூடும்.
அடிப்படை காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதே இதற்கான முக்கிய படிநிலையாகும். மருந்து மற்றும் சிகிச்சைகளுடன், தேவைப்பட்டால் மருத்துவர் வலி நிவாரணிகளையும் பரிந்துரை செய்யக்கூடும். அதிக உடற்பயிற்சி, ஓய்வு, சரியான உணவுத் திட்டம் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படலாம். பசியைத் தூண்டும் மருந்துகள் மற்றும் உணவின் சுவையை கூட்டுவது போன்ற சில நுட்பங்கள் பசியைஅதிகரிக்க உதவுகின்றன.