கால் தசைப்பிடிப்பு என்றால் என்ன?
கால் தசைப்பிடிப்பு என்பது தொடை அல்லது கால் பகுதியில் ஏற்படும் வலி மிகுந்த தசை சுருக்கங்களாகும். இது வழக்கமாக திடீரென்று மற்றும் தன்னிச்சையாக ஏற்படலாம். இந்த தசை சுருக்கங்கள் தானகவே சரியாகிவிடும். கால் தசைப்பிடிப்பு இளைஞர்களை விட முதியவர்களிடத்தில் பொதுவாக காணப்படுகிறது. தடகள வீரர் அல்லது பிற விளையாட்டு வீரர்களின் உடல் சார்ந்த மிகை முயற்சி/செயல்பாட்டால் கால் தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும். இருப்பினும் கால் மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள தசைகளில் கூட பிடிப்புகள் ஏற்படலாம்.
இந்த தசை பிடிப்புகள் வழக்கமாக தீவிரமாக இருப்பதில்லை, பெரும்பாலான சூழ்நிலைகளில் அவை பிற சிக்கல்களை ஏற்படுத்தாத வகையில் உள்ளன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சில சமயங்களில், கால் தசைப் பிடிப்புகள் குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படக்கூடும். இதனால் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடக்கூடும். இந்த வகை தசைப் பிடிப்புகள் இரவுநேர தசைப் பிடிப்புகள் என அழைக்கப்படுகின்றன. கால் தசைப் பிடிப்புகள் கால் வீக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கால் தசைப்பிடிப்புகள் ஏறக்குறைய எப்பொழுதும் எந்த விதமான காரணம், முகவர் அல்லது தூண்டல் இன்றி எழுகின்றன. சில நோயைத் தீவிரப்படுத்தும் காரணிகள் கால் தசைப்பிடிப்பைத் தூண்டக்கூடும் அல்லது மோசமாக்கக்கூடும். அவை பின்வருமாறு:
- மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் கால் தசைப் பிடிப்புகளை மோசமாக்கக்கூடும் அல்லது தசைப் பிடிப்புகளை நீட்டிக்கச் செய்யும்.
- கர்ப்பம் அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில அமர்ந்திருப்பது போன்ற உடலியல் நிலைகள் கூட கால் தசைப் பிடிப்புகளை ஏற்படுத்தும்.
- நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் போன்ற நரம்புத்தசைக்குரிய நோய்கள் பெரும்பாலும் கால் தசைப் பிடிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- சிலருக்கு, கால் தசைப் பிடிப்புகள் மருந்துகள் பயன்பாட்டின் பக்க விளைவாக ஏற்படக்கூடும்.
- குறிப்பிட்ட தசை அல்லது தசை குழுவின் அதிகப்படியான பயன்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கால் தசைப் பிடிப்புகள் மட்டுமே இருந்தால், இதற்கான குறிப்பிட்ட ஆய்வுகள் தேவைப்படுவதில்லை. மருத்துவர் வீக்கம், காயம் அல்லது பிற தொடர்புடைய பிரச்சினைகளை கண்டறிய கால்களை பரிசோதிப்பார். வேறு ஏதேனும் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மேற்கொள்ளப்படலாம்.
பெரும்பாலான நேரங்களில், கால் தசைப்பிடிப்புகள் தானாகவே சரியாகிவிடும். முறையான உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு தவிர வேறு எந்த முக்கிய சிகிச்சையும் இதற்கு தேவைப்படுவதில்லை. வெதுவெதுப்பான ஒத்தடம் இதற்கு உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது. சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது கால் விரல் நுனியில் நடத்தல் குறிப்பாக கால் தசைப்பிடிப்புகளைப் போக்க உதவியாக இருக்கும். வலி நீடித்திருந்தால் அல்லது தாங்கமுடியாததாக இருந்தால், மருந்துச்சீட்டு இன்றி வழங்கப்படும் வலி நிவாரண மருந்துகள் அல்லது தசைத்தளர்த்தி பயனுள்ளதாக இருக்கும்.