சீழ்படிந்த கட்டி என்றால் என்ன?
ஏதாவது ஒரு உறுப்பு அல்லது திசுவில் சீழ் உருவாகுதல் மற்றும் குவிதலே சீழ்படிந்த கட்டி ஆகும். இது நுண்ணுயிர்கள், இறந்த செல்கள், திரவம் மற்றும் பிற சிதைவுக் கூளங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. முகம், வாய், பற்கள், சிறுநீரகங்கள் மற்றும் வயிறு போன்ற உடலின் எந்தப் பாகத்திலும் இந்த சீழ்படிந்த கட்டி ஏற்படலாம். எனினும், சருமத்தில் ஏற்படும் சீழ்படிந்த கட்டிகள் மிகவும் பொதுவானவை.
இதனோடு தொடர்புடைய முக்கிய அறிகுறிகள் என்ன?
- சருமத்தில் ஏற்படும் சீழ்படிந்த கட்டியின் பொதுவான அறிகுறிகள் சிவத்தல், வலி, வீக்கம் மற்றும் மஞ்சள் நிற திரவம் நிறைந்த ஒரு சிறிய தோல் வெடிப்பு ஆகும்.
- உட்புற உறுப்புகளில் சீழ்படிந்த கட்டி இருந்தால், தொற்றுநோயால் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுடன், அந்தப் பகுதியில் வலியும் ஏற்படும்.
- நுரையீரலில் சீழ்படிந்த கட்டி இருந்தால், மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, மற்றும் இருமல் இருக்கும். சீழ்படிந்த கட்டி எங்குள்ளது என்பதைப் பொறுத்து, அந்த உறுப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கின்றது.
- இதேபோல், டான்சில்களைச் சுற்றி ஒரு சீழ்படிந்த கட்டி இருந்தால், அந்த நபருக்கு பேசும் போதும் விழுங்கும் போதும் வலி ஏற்படும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- பாக்டீரியா, அல்லது வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற பிற நுண்ணுயிரிகளால் தொற்று ஏற்படுகையில், ஒரு சீழ்படிந்த கட்டி பொதுவாக உருவாகிறது.
- ஏதேனும் உறுப்பில் உள்ள அயல்பொருட்கள் கூட சீழ்படிந்த கட்டிக்கு காரணமாக இருக்கலாம்.
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு எளிதில் சீழ்படிந்த கட்டி வரலாம். நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- எய்ட்ஸ்.
- நீரிழிவு.
- புற்றுநோய்.
- வேதிச்சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை.
- குடிப்பழக்கம்.
- வேறு சில நோய்களுடன் சேர்ந்து சீழ்படிந்த கட்டி ஏற்படும் என்பது இல்லை. ஆரோக்கியமான நபர்களுக்கு கூட சீழ்படிந்த கட்டி ஏற்படலாம்.
- உள்வளர்ந்த மயிர்க்கால்கள் பாதிப்படையலாம், மேலும் அதைச் சுற்றி ஒரு சீழ்படிந்த கட்டி ஏற்படலாம், இது கொப்பளம் அல்லது கட்டி என்று அழைக்கப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- எளிய மருத்துவ பரிசோதனை மூலம் மருத்துவர் சீழ்படிந்த கட்டியை கண்டறிய முடியும். காரணங்களை உறுதிப்படுத்த, பாதிக்கப்பட்ட நபரின் முழுமையான மருத்துவம் சார்ந்த வரலாற்றை அறிந்து பரிசோதனை மேற்கொள்வது மற்ற இடங்களில் உள்ள சீழ்படிந்த கட்டியை கண்டறிய மிகவும் அவசியமானதாகும்.
- தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், மருத்துவர் இரத்த பரிசோதனைகள் அல்லது சீழ்படிந்த கட்டியின் நடுவில் இருக்கும் திரவத்தின் சோதனை, முதலியவற்றை மேற்கொள்ள உத்தரவிடலாம்.
- பாதிக்கப்பட்ட உறுப்பின் எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன், கண்ணுக்கு தெரியாத சீழ்படிந்த கட்டியின் இருப்பை அறிய உதவுகிறது.
- சீழ்படிந்த கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் சிகிச்சை வேறுபடுகிறது.இது ஒரு சிறிய, சருமத்தில் ஏற்படும் சீழ்படிந்த கட்டி என்றால், ஆண்டிபயாடிக்ஸ்களுடன் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தல் போன்ற வீட்டு வைத்தியமே போதுமானதாகும்.
- ஏதேனும் உறுப்பில், பெரிய சீழ்படிந்த கட்டி இருந்தால், அறுவை சிகிச்சை வடிகாலே இதற்கான சிறந்த சிகிச்சையாக இருக்கலாம். மயக்க மருந்தின் கீழ், மருத்துவர் உள்ளடக்கத்தை வெளியேற்றுவதற்கு, அந்த கேவிட்டி மூலம் சீழ்படிந்த கட்டியை திறப்பார். இதனுடன் சேர்ந்து, நோய்த்தாக்கத்தை முழுமையாக அழிக்க, ஆண்டிபயாடிக்ஸ் வழங்கப்படும்.
- அறுவைச் சிகிச்சைக்கான வெட்டுக்கீறல் மற்றும் அறுவைச் சிகிச்சை வடிகால் போன்ற வழக்கமான அறுவை சிகிச்சை முறையில் பல மாற்றங்கள் உள்ளன. மருத்துவர், சம்பந்தப்பட்ட உடல் பாகத்தையும், சீழ்படிந்த கட்டியின் அளவையும் பொருத்து அறுவை சிகிச்சை செய்வார்.