சுருக்கம்
தொண்டை புற்றுநோயானது தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக் கூடிய புற்று நோயின் ஒரு வகை ஆகும், இந்த புற்று நோய் வகையில் தொண்டைப் பகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள செல்களில் (உயிரணுக்களின்) கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்படுகிறது. தொண்டை புற்றுநோய் தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களைப் பொறுத்து, வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதன் முக்கியமான அறிகுறிகளானது: உண்பதில் அல்லது விழுங்குவதில் சிரமம், தொண்டை வலி, பேசுவதில் கஷ்டங்கள் மற்றும் தொடர் இருமல் போன்றவை. வயது, பாலினம் மற்றும் மரபணு பாதிப்புகள் போன்ற பல ஆபத்து காரணிகள், தொண்டை புற்றுநோயை உருவாக்குகிறது. புகையிலை உபயோகம் மற்றும் அதிக அளவு மது அருந்துதல் ஆகியவை தொண்டை புற்றுநோயை உருவாக்குவதில் முக்கியமாக தொடர்பு உடையவை ஆகும். தொண்டை புற்றுநோய் ஒரு உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், இமேஜிங் சோதனைகள் மற்றும் மாதிரி செல்களை சேகரித்து செய்யப்படும் பரிசோதனைகள் (பயாப்ஸி) ஆகியவற்றால் கண்டறியப்படுகிறது. தொண்டை புற்றுநோய்க்கு கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியேஷன் தெரபி), இலக்கு சிகிச்சை (டார்கெட்டட் தெரபி) மற்றும் அறுவை சிகிச்சை தலையீடு( சர்ஜிக்கல் இன்டெர்வேன்ஷன்) போன்ற பல வகை சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக புற்றுநோய் சிகிச்சை பல பக்க விளைவுகளுடன் தொடர்புடையது. இந்த பக்க விளைவுகள் மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் நிர்வகிக்கப் படலாம். புற்று நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப் பட்டுவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.