டென்னிஸ் எல்போ என்றால் என்ன?
டென்னிஸ் எல்போ, இது மருத்துவ ரீதியாக பக்கவாட்டு எபிகாண்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது, இது முழங்கை தசைகளை முழங்கை மூட்டிற்கு இணைக்கும் தசை நாண்களுக்கு அதிகப்படியான மற்றும் தொடர்ந்த அழுத்தத்தால் வீக்கம் ஏற்படுத்தி வலுவிழக்க செய்கிறது. பொதுவாக டென்னிஸ் அல்லது விறுவிறுப்பான விளையாட்டுகள் விளையாடுகையில் தசைநாண்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதால் இந்த நிலை ஏற்படும். இது கிரிக்கெட் வீரர்கள், டென்னிஸ், பேட்மின்டன் மற்றும் ஸ்குவாஷ் வீரர்களின் பொதுவாக காணப்படும் ஒரு நிலையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
டென்னிஸ் எல்போவின் அறிகுறிகள், நேரம் செல்ல செல்ல படிப்படியாக வலியை அதிகரிக்கும் மற்றும் அறிகுறிகள் கவனிக்கப்படவில்லை என்றால் அது மோசமான நிலையை அடைகிறது. வளரும் இந்த நிலைமையின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
- முழங்கை மூட்டிற்கு வெளியே மற்றும் அதனைச் சுற்றி நிலையான வலி.
- பிடிப்பு தளர்வு.
- முழங்கை மூட்டைப் பயன்படுத்தி சிறிய பணிகள் செய்யும் போது வலி மற்றும் விறைப்பு.
- முழங்கை மூட்டு மீது வீக்கம் மற்றும் சிவத்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முழங்கையின் மூட்டுப்பகுதியில் தொடர்சியாக கடுமையான செயல் நிகழும் போது, அது தசைநாண்களை சேதமடைய செய்கிறது. இதுவே டென்னிஸ் எல்போ ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும். இந்த நிலை ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- மேல் கைக்கு வலிமை தேவைப்படும் விளையாட்டுகளை விளையாடுவது, எ.கா., வலைப்பந்து(டென்னிஸ்), ஸ்குவாஷ்.
- மற்ற செயல்பாடுகளான ஈட்டி எறிதல் (ஜவெலின் த்ரோ), வட்டு எறிதல் (டிஸ்கஸ் த்ரோ) மற்றும் தோட்டக்கலை போன்ற பிற நடவடிக்கைகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் ஒரு உடல் பரிசோதனையை மேற்கொள்வார் மற்றும் எந்த செயலினால் இந்த அறிகுறிகள் தோன்றின என்ற காரணத்தையும் விசாரிப்பார். தசை நாண்கள் மற்றும் தசைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய மருத்துவர் சில சோதனைகளை அறிவுருத்தலாம்:
- எக்ஸ்-ரே.
- எம்.ஆர்.ஐ ஸ்கேன்.
- எந்த நரம்பு சேதப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்ய தசை மின்னியக்கப் பதிவியல் (ஈ.எம்.ஜி).
அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை என்ற இரு சிகிச்சை முறைகளும் இந்த நிலைக்கு உண்டு. பெரும்பாலான டென்னிஸ் எல்போ நிலையை அறுவை சிகிச்சை இல்லாமல் கையாள முடியும். சிகிச்சை முறைகளில் பின்வரும் வகைகள் அடங்கும்.
- உடல் சிகிச்சை.
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- ஓய்வெடுத்தல் மற்றும் எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் செய்வதை தவிர்த்தல்.
- நிலை மோசமாகிவிட்டால், அறுவை சிகிச்சை செய்து சேதமடைந்த தசைநாண்களை சரிசெய்ய வேண்டும். ஆயினும், இது வலிமை பெற புனர்வாழ்வு சிகிச்சை தேவைப்படுகிறது. மொத்தத்தில், இந்த நிலைக்குறித்து பயப்படத் தேவையில்லை, பெரும்பாலும் அறுவைசிகிச்சை இல்லாமல் சிகிச்சையளிக்கலாம்.