நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸ் என்றால் என்ன?
நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸ் என்பது பிறந்த குழந்தைகளின் குடலில் ஏற்படும் ஒரு தீவிர நோயாகும். பொதுவாக 1.5 கிலோவிற்கு குறைவாக எடை இருக்கும் குறைமாதக் குழந்தைகளிடம் இந்த நோய் காணப்படுகிறது. இந்நோயில் நுண்ணுயிர் (பாக்டீரியா) நோய்த்தொற்றால் குடல் சுவற்றில் வீக்கமும் சிதைவும் ஏற்பட்டு அதனால் குடலில் துளை ஏற்படுகிறது. குடலின் மலக்கழிவு வயிற்றுக்குழிக்குள் கசிந்து தீவிர நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் மற்றும் இது முதல் இரு வாரங்களிலேயே காணப்படுகிறது. பின்வரும் அறிகுறிகள் வழக்கமாக காணப்படுகின்றன:
- வயிற்றுப்பகுதியில் உப்பல் மற்றும் வீக்கம்.
- மலக்கழிவில் இரத்தம்.
- குறைந்த இதயத்துடிப்பு விகிதம். (மேலும் வாசிக்க: குறை இதயத் துடிப்பு நோயின் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறை).
- வயிற்றுப்போக்கு.
- குறைந்த இரத்த அழுத்தம்.
- தற்காலிக மூச்சுத்திணறல்.
- மந்தநிலை.
- மென்மையான அல்லது சிவந்த வயிற்றுப்பகுதி.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நோயின் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறைந்த இரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு கிடைப்பதினால் ஏற்படும் பலவீனமான குடல் சுவர் நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸ் என்ற நிலைக்கு காரணமாக இருக்கிறது மற்றும் அந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவில் உள்ள நுண்ணியிரிகள், பலவீனமான குடல் சுவற்றை தாக்கி அதன் விளைவாக குடல் வீக்கம், சிதைவு மற்றும் குடலில் துளை ஏற்படுகிறது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸை கண்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள சோதனைகள் செய்யப்படுகின்றன:
- எக்ஸ்-கதிர்கள் சோதனை: எக்ஸ்-கதிர்கள் சோதனை வயிற்றில் உள்ள குமிழிகளை காட்டுகின்றன.
- மற்ற கதிர் வரைவு முறைகள்: இவை கல்லீரலுக்கு செல்லும் இரத்த நாளங்களில் அல்லது குடலுக்கு வெளியே உள்ள வயிற்றுப்பகுதியில் இருக்கும் குமிழிகளை காண்பிக்கின்றன.
- ஊசி நுழைப்பு: வயிற்றுக் குழிக்குள் நுழைக்கும் ஊசி குடல் நீரை வெளிக்கொண்டு வந்தால் அது குடல் சுவற்றில் ஏற்பட்டிருக்கும் துளையை குறிக்கிறது.
நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸிர்க்கான சரியான சிகிச்சை முறை குழந்தையின் நிலையைச் சார்ந்துள்ளது. நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸின் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வாய்வழி உட்கொள்ளுதலை நிறுத்துதல்.
- வயிற்றிலும் குடலிலும் உள்ள நீர் மற்றும் குமிழிகளை குழாய் அல்லது ஒரேகாஸ்டிரிக் குழாய் மூலம் அகற்றுதல்.
- சிரைவழி திரவம் ஏற்றுதல்.
- நுண்ணுயிர்க்கொல்லிகளைக் கொடுத்தல்.
- எக்ஸ்ரே உபயோகித்து குழந்தையின் நிலையை முறையாக பரிசோதித்தல்.
- வயிற்றுப்பகுதி வீங்கிய நிலையில் இருந்தால், எக்ஸ்டெர்னல் ஆக்சிஜென் சப்போர்ட் எனப்படும் வெளியிலிருந்து பிராணவாயு தந்து சுவாசிக்கும் முறை உதவும்.