சுளுக்கு என்றால் என்ன?
சுளுக்கு என்பது உடலின் எலும்புகளை இணைக்கின்ற தசைநார்கள் அதிகமாக விரிவதால் அல்லது உடல் செயல்பாட்டின் போது கிழிந்து போவதால் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இது மிகவும் பொதுவாக கணுக்கால்களை பாதிக்கிறது, ஆனால் இது கைகளின் தசைநார்களிலும் ஏற்படலாம். அமெரிக்காவில், நாளொன்றுக்கு 30,000 சுளுக்கு பாதிப்பு நிகழ்வுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட பகுதியில் இடிமா (வீக்கம்).
- வலி.
- பாதிக்கப்பட்ட உடல் பகுதிகளை அசைக்க இயலாமை.
- பாதிக்கப்பட்ட பகுதி கன்றி இருத்தல் (நிறம் மாறி இருத்தல்).
- பாதிக்கப்பட்ட பகுதி மென்மையாக உணர்தல்.
சுளுக்கினை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு அதன் தரத்தின்படி பிரிக்கலாம்:
- தரம் 1 லேசானவை: எடையை தாங்கக் கூடியது.
- தரம் 2 மிதமானவை: நொண்டி நடத்தல் (கணுக்கால் சுளுக்குகளில் காணப்படும்)
- தரம் 3 கடுமையானவை: நடக்க இயலாமை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தசைநார்கள் மீது அளவுக்கு அதிகமான தகாத அழுத்தத்தை கொடுப்பதனால் மூட்டுகளில் இடப்பெயர்வு ஏற்படலாம். இது மேலும் மென்திசு நீளல் அல்லது மூட்டுகளில் சேதத்திற்கு வழிவகுக்கும். நடைபயிற்சியின் போது ஒழுங்கற்ற நடைப்பாங்கில் நடத்தல், நடக்கும் போது அல்லது ஓடும்போது கணுக்காலை திருப்புதல் அல்லது கீழே விழுந்த பிறகு சுளுக்கு ஏற்படலாம்.தொடர்ச்சியான கடுமையான சுளுக்குகள் தசைநார் மற்றும் மூட்டுகளில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயாளியிடம் சுளுக்கு ஏற்பட்ட காரணத்தை கேட்டு அறிவதன் மூலம் முக்கிய நோயறிதல் செய்யப்படுகிறது. மற்ற நிலைகளிலிருந்து இந்த நிலையை வேறுபடுத்திப் பார்க்க மருத்துவர் ஒரு உடல் பரிசோதனையை மேற்கொள்வார். பாதிக்கப்பட்ட இடத்தை மென்மையாக தொட்டுணர்தல் கூட சுளுக்கிற்கான நோயறிதலுக்கு உதவுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் உங்கள் செயல்பாட்டில் அளவும் கண்காணிக்கப்படுகிறது. நிலைமையினை ஆய்வு செய்ய உருவரைவு தொழில்நுட்பங்களான எக்ஸ்- கதிர்கள் சோதனை, அழுத்த எக்ஸ்-கதிர்கள் சோதனை, எம்.ஆர்.ஐ ஊடுகதிர் படங்கள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை பயன்படுத்தப்படலாம்.
சுளுக்குக்காண சிகிச்சையானது பாதிக்கப்பட்ட மூட்டை அசைக்க முடியாதபடி பார்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தை ஓய்வில் வைத்திருப்பது நல்லது; பனிக்கட்டி ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்கும். பாதிப்படைந்த இடத்தை இருக்கமாக கட்டுவது பக்கபலமாக இருக்கும் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை இல்லாத முறைகள் போதுமானதாக இருக்கும். முழு அளவிலான இயன்முறை மருத்துவம், (பிசியோதெரபி) இயக்கம் மற்றும் வலிமையை முழுமையாக திரும்ப பெற உதவும். வலி நிவாரணம் கொடுக்கும் மருந்துகள் அறிகுறிகளைத் தீர்க்க உதவலாம்.
ஒரு சுளுக்கினை முறையான பராமரிப்பு மூலம் எளிதில் சரிசெய்ய முடியும். பாதிக்கப்பட்ட பகுதிகளை அசைக்காமல் இருத்தல் மற்றும் மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் சுளுக்கை விரைவாக குணப்படுத்த முடியும்.