இதய உட்சவ்வு அழற்சி என்றால் என்ன?
இதயம் பெரிகார்டியம், மயோகார்டியம் மற்றும் எண்டோகார்டியம் என்ற மூன்று அடுக்குகளை கொண்டது. அதன் மிகவும் உட்புற அடுக்கான எண்டோகார்டியத்தில் ஏற்படும் வீக்கமே எண்டோகார்டிடிஸ் அல்லது இதய உட்சவ்வு அழற்சி என அழைக்கப்படுகிறது. வழக்கமாக பாக்டீரியல் தொற்றுகள் காரணமாக எண்டோகார்டியத்தில் அழற்சி ஏற்படுகிறது. பாக்டீரியா வாய் வழியாக நுழைந்து ரத்த ஓட்டத்தை அடைந்து இறுதியில் எண்டோகார்டியத்தை பாதிக்கிறது. இது இதயத்தை சேதப்படுத்தி உயிருக்கு அபாயம் விளைவிக்கும் சிக்கல்களை ஏற்படுத்துமென்பதால் எண்டோகார்டிடிஸிற்கு ஒரு வலிமையான சிகிச்சை தேவைப்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவை பொறுத்து அறிகுறிகள் மெதுவாகவோ அல்லது விரைவாகவோ உருவாகலாம்; அதற்கேற்றாற்போல் இது கடுமையான நோய் அல்லது நாட்பட்ட நோய் என வகைப்படுத்தப்படுகிறது. எண்டோகார்டிடிஸின் அறிகுறிகள் அதன் தீவிரத்தில் வேறுபடுவதுடன் முன்பேயுள்ள மருத்துவ அல்லது இதயம் சார்ந்த பிரச்சனைகளை பொறுத்து அமைகிறது. ஒரு சில அறிகுறிகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:
- குளிருடன் கூடிய காய்ச்சல்.
- மூச்சுவிடுவதில் சிரமம் (குரல்பாகுபாடு).
- மூச்சுவிடும்போது நெஞ்சு வலிப்பது.
- பாதத்தில் வீக்கம்.
- ரத்தப்புள்ளிகள் (சருமத்தில் சிறிய ஊசிமுனை போன்ற சிவப்புப்புள்ளிகள்).
- சோர்வு.
- மூட்டு வலி மற்றும் உடல் வலி.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
உடலினுள் நுழையும் சில பாக்டீரியா ரத்தத்தின் வழியாக பயணித்து இதயத்தை அடைந்து எண்டோகார்டிடிஸை ஏற்படுத்துகிறது. பாக்டீரியா மட்டுமல்லாது சில பூஞ்சையும் எண்டோகார்டிடிஸுக்கு காரணமாகிறது. இந்த பாக்டீரியா இவைகளின் வழியே ரத்த ஓட்டத்திற்குள் நுழைகிறது:
- வாய்.
- சருமம் மற்றும் பல்லீரலில் தொற்று.
- தூய்மையாக்கப்படாத ஊசிகள் அல்லது சிரிஞ்ஜுகள் அல்லது ஏற்க்கனவே பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்துவது.
- வடிகுழாய்கள் மற்றும் லேபராஸ்கோப் போன்ற மருத்துவ உபகரணங்கள்.
பிறப்பிலேயே இதய நோயுள்ளவர்கள், இதய வால்வில் நோயுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், செயற்கை வால்வு பொறுத்தப்பட்டவர்கள் அல்லது இதய நோயுடைய வரலாற்றை கொண்டவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் எண்டோகார்டிடிஸ் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாகும்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு துல்லியமான மருத்துவ வரலாறுடன் கூடிய முறையான உடல் பரிசோதனை எண்டோகார்டிடிசை எடுத்துக்காட்டுகிறது. ஒரு உடல் பரிசோதனை, முணுமுணுப்பு என்றழைக்கப்படும் அசாதாரண இதய ஒலிகள் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா எது என்பதையும் எண்டோகார்டியத்துக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தையும் அறிவது முக்கியமாகும். எனவே சில சோதனைகள் தேவைப்படுகின்றன. அவை:
- முழுமையான ரத்த எண்ணிக்கை (சிபிசி).
- ஆண்டிபயாடிக் உணர்திறனுடன் கூடிய ரத்த வளர்சோதனை.
- சி-எதிர்வினை புரதங்களின் (சிஆர்பி’ஸ்) அளவு சோதனை.
- மின் ஒலி இதய வரைவு (2டி எக்கோ என்றும் அறியப்படுகிறது).
- சி.டி ஸ்கேன்.
எண்டோகார்டிடிஸுக்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- மருத்துவ நிர்வாகம் - பரந்த ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக்குகளோ அல்லது ரத்த வளர்சோதனையின் அறிக்கைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படவேண்டியதோ வாய்வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ தரப்படுகிறது. சில சமயங்களில் காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உடல் வலி மற்றும் சோர்வை போக்கவும் காய்ச்சல் நீக்கமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- அறுவை சிகிச்சை நிர்வாகம் - இது மிட்ரல் ஸ்டெனோசிஸ் போன்ற இதய வால்வு நோய்களுக்கு பலியாகிறவர்களுக்கு வழங்கப்படுகிறது. முக்கியமாக இதய வால்வின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட வால்வை சரிசெய்வதன் மூலமாகவோ அல்லது அதை மாற்றி செயற்கை வால்வை பொருத்துவதன் மூலமாகவோ இந்த அறுவை சிகிச்சையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது.