கடைவாய்ப்பல் வலி என்றால் என்ன?
அறிவுப்பல் அல்லது ஞானப்பல் என்பது வாயில் உள்ள நான்கு காற்பகுதியிலும் கடைசி அல்லது பின் பல்லாக முளைக்கக் கூடிய கடைவாய்ப்பல் ஆகும். இது 17 (டீன் வயதின் பிற்பகுதியில்) முதல் 25 (இருபது வயதின் தொடக்கத்தில்) வயதுக்குள், அதாவது ஒரு மனிதன் உலக அறிவைப் (ஞானம்) பெறும் வேளையில் முளைக்கிறது. மொத்தம் நான்கு அறிவுப்பற்கள், அதாவது இரண்டு மேல் தாடைகளில் மற்றும் இரண்டு கீழ்த்தாடைகளில் உள்ளன. ஆனால் சிலரில் பல் முளைப்பதை பாதிக்கும் சில காரணிகளை பொறுத்து, குறைவாக, அதிகமாக அல்லது இல்லாமலும் இருக்கலாம். கடைவாய்ப்பல் வலி பல காரணங்களால் ஏற்படக்கூடும். இதில் மிகவும் பொதுவானது வரிசையை விட்டு விலகி இருத்தல் மற்றும் நோய்த் தொற்று.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனோடு தொடர்புடைய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- வீக்கத்தை ஏற்படுத்தும் நீர்க்கட்டிகள்.
- பல்லுக்கு அருகில் உள்ள ஈறுகளின் வீக்கம் மற்றும் சிவத்தல்.
- ஈறுகளில் இருந்து சீழ் வடிதல்.
- பற் சொத்தை.
- வாய் துர்நாற்றம்.
- காய்ச்சல்.
- விழுங்குவதில் சிரமம்.
- தாடை அடியில் உள்ள நிணநீர்கணுக்களில் புண் மற்றும் வீக்கம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- தாடையில் போதுமான இடம் இல்லாமையால் பற்கள் ஒழுங்காக (வரிசையாக) முளைப்பது தடைபட்டு வலி ஏற்படுகிறது.
- ஒழுங்கற்ற வரிசையில் பற்கள் முளைத்தால் பற்களை துலக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பற்கள் இடையே உணவுப்பொருட்கள் தங்கி, பாக்டீரியா வளர்ச்சி, நோய்த் தொற்று மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கடுமையான கடைவாய்ப்பல் வலி இருந்தால், பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும். மருத்துவர் பல் வலியின் காரணத்தை அடையாளம் காண, உங்கள் பற்கள், வாய் மற்றும் ஈறுகளை பரிசோதித்துப் பார்ப்பார். கடைவாய்ப்பல்லின் நிலையை தெளிவாக மற்றும் சிறந்த முறையில் காண எக்ஸ்-கதிர்கள் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பல் வலிக்கான சரியான சிகிச்சை அதன் காரணத்தை சார்ந்துள்ளது, ஆனால் பல் வலிக்கு பின்வரும் பொதுவான சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படலாம்:
- நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
- மருந்துச் சீட்டு இன்றி வழங்கப்படும் வலி நிவாரண மருந்துகள்.
- கிருமிநாசினி உடைய வாய் கழுவும் மருந்துகள்.
- மற்ற சிகிச்சை முறைகள் வேலை செய்யாமல் வலி நீடித்திருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அறிவுப்பல் அகற்றப்படுகிறது.
- கடுமையான நோய்த் தொற்று இருப்பின், வீக்கத்திலிருக்கும் சீழை வடிகால் செய்வது சிகிச்சை முறையின் ஒரு பகுதியாகும்.
உடனடியாக பல்மருத்துவரை ஆலோசித்து கடைவாய்ப்பல் வலிக்கு உடனடியாக சிகிச்சைப் பெறுவது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும் நோய்த்தொற்று மேலும் பரவாதிருக்கவும் உதவுகிறது.