மெனோபாசிற்கு பிறகு ஏற்படக்கூடிய எலும்பு சிதைவு நோய் (மாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை) என்றால் என்ன?
எலும்புப்புரை என்பது எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும். இதில் எலும்பு பலவீனமாகவும் எளிதில் உடையக்கூடியதாகவும் காணப்படுகிறது. மெனோபாஸ் வழக்கமாக பெண்களில் 45-52 வயதில் ஏற்படுகிறது. இது பல ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் கால்சியம் உறிஞ்சுதல் போன்ற பல உடலியல் தாக்கங்களுக்கு வழிவகுக்கிறது. மாதவிடாய் நின்றபிறகு, ஈத்திரோசன் அளவுகள் குறைகின்றன. ஈத்திரோசனின் பாதுகாக்கும் செயல்பாடு இழப்பு காரணமாக பெண்களுக்கு எலும்புப்புரை அதிகமாக ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்நோய் எளிதில் அறிகுறிகளை வெளிப்படுவதில்லை. இது எலும்பு முறிவாக வெளிப்பட்டாலோ அல்லது வேறு நோக்கத்திற்காக நடத்தப்பட்ட எக்ஸ்ரே அல்லது உடல் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கும் வரை இந்த நோய் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. சில மயிரிழையான எலும்பு முறிவுகள் கவனிக்கப்படாமலும் போகலாம். இதற்கான எடுத்துக்காட்டு முதுகெலும்புச்சிரை முறிவு ஆகும், இது உடல் அசைவுகளில் அதிகரிக்கும் லேசான முதுகுவலியாகவே தோன்றுகிறது. மிதமான விசை (சிறிய மோதல்) மூலமாகவும் எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன. அவை எளிதில் முறியும் எலும்பு முறிவுகள் என்று அழைக்கப்படுகின்றன. பிந்தைய கால கட்டங்களில், இது போன்ற பல முதுகெலும்பு முறிவுகளால் நோயாளிகள் குட்டையான உயரத்தை அனுபவிக்கலாம். மேலும், பெண்களில் வலுவற்ற எலும்புகள் காரணமாக தோற்றத்தில் மாற்றம் ஏற்ப்பட்டு முதுகுயர்ந்த வளைவுநிலை அல்லது பின் கூனல் காணப்படுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மாதவிடாய்க்கு முன் கருப்பையால் உருவாக்கப்படும் ஹார்மோன்கள் எலும்பு உருவாக்கம் மற்றும் எலும்புத்திசு அழிவு ஆகியவற்றின் சமநிலையை பராமரிக்கின்றன, ஆனால் கருப்பையின் செயல்பாடு மற்றும் ஹார்மோன்கள் முதுமையின் காரணமாக பிறழ்ந்து விடுகிறது. குறைந்த கருப்பை ஹார்மோன்கள் எலும்புத்திசு அழிவின் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்புத்தாது அடர்த்தி குறைந்து எலும்புகள் வலுவிழந்து இருக்கும். இதனால் சாதாரணமாக கீழே விழுதல் போன்றவைகளில் கூட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மாதவிடாய் நிறுத்தத்தின் ஒரு சில ஆண்டுகளில் எலும்பின் உடையுமை அதிகரிக்கிறது மற்றும் எலும்பின் வலிமை கணிசமாக குறைகிறது.
சமநிலை மற்றும் தோற்றப்பாங்கை சரியாக பராமரிக்க முடியாமல் கீழே விழும் நபர்களில் எலும்பு முறிவு அதிகம் காணப்படுகிறது. உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு இன்மையும் எலும்பு முறிவுக்கு வழிவகுக்கக்கூடும். மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் இதற்கு காரணமான கூடுதல் காரணிகள் ஆகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவுகளில் மாற்றம், இரத்த சோகை, தைராய்டு செயலிழப்பு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் மது அருந்துவதால் கல்லீரலில் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றின் காரணமாக எலும்புப்புரை ஏற்படலாம். இதனால், தைராய்டு செயல்பாட்டு சோதனை, இரத்தத்தில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் அளவுகளை மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனைகள் போன்றவை செய்யப்படலாம். எலும்பு முறிவு இருப்பதாக சந்தேகப்பட்டால், எக்ஸ் கதிர்கள் சோதனை கட்டாயமாக செய்ய வேண்டும். 1.5 அங்குலற்கும் அதிகமாக உயர இழப்பு இருப்பின், எக்ஸ்ரே இயல்நிலை வரைவு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எலும்பு தாது அடர்த்தி ஸ்கேன் அல்லது டெக்சா ஸ்கேன் என்ற இயல்நிலை வரைவு சோதனை எலும்புப்புரை கொண்டிருக்கும் பல்வேறு எலும்புகள் மற்றும் அதன் தீவிரத்தை அடையாளம் காண உதவுகிறது.
இதற்கான சிகிச்சை எலும்புகளை வலுமைப்படுத்தும் சில மருந்துகளை உள்ளடுக்குகிறது. எலும்புத்திசு அழிவை குறைக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி பிற்சேர்க்கைகள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படுகின்றன. எனினும், ஹார்மோன் மாற்றீடு பரிந்துரைக்கப்படுவதில்லை. எலும்பு தாது அடர்த்தி தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும். நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கீழே விழுதல் மற்றும் காயங்கள் ஏற்படாமல் தவிர்த்தல் போன்றவற்றில் கவனமாக இருந்து எலும்பு முறிவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.