ஓரோபரிங்கியல் புற்றுநோய் என்றால் என்ன?
தொண்டை புற்றுநோய் என்று பொதுவாக அழைக்கப்படும் ஓரோபரிங்கியல் புற்றுநோய், வாயின் பின்பகுதியில் உள்ள மெல்லிய தசை பகுதி, டான்சில்ஸ், பிண்ணாக்கின் மூன்றில் ஒரு பகுதி மற்றும் மேல் தொண்டை (முன்குரல்வளை) பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புற்றுநோய் ஒருவரின் மூச்சு, உணவு உண்ணுதல் மற்றும் பேச்சை பாதிக்கிறது. இந்தியாவில் முக்கியமான மூன்று புற்றுநோய்களில் இந்த தொண்டை புற்றுநோயும் ஒன்று. இது பெண்களை விட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. நடுத்தர வயதினருக்கும் குறைவான வருமானம் உடையவர்களுக்கும் இருக்கும் புகையிலை பழக்கம் போன்ற ஆபத்து காரணிகளுக்கு அதிகமாக வெளிப்படுவதால் இவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக இந்நோயின் தாக்கம் முதலில் அறியப்படுவதில்லை. இதற்கு காரணம் வலியின்மை மற்றும் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை நாம் கவனிக்காமல் விடுவது. புற்றுநோய் நான்கு நிலைகளை கொண்டது, அது நிணநீர் முனைகளில் மற்றும் இதர பாகங்களில் பரவியிருக்கும் புற்று நோயின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது.
தொண்டை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- நீர் அருந்துதல் மற்றும் உணவை மெல்லுதல்/விழுங்குவதில் சிரமம்.
- தாடையில் இறுக்கம் ஏற்பட்டு வாயை முழுவதுமாக திறப்பதற்கு சிரமமாக இருக்கும்.
- தொண்டை கரகரப்பு.
- வாயில் ஆறாத புண்கள்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் வீக்கம்.
- நாக்கை அசைப்பதில் சிரமம்.
- பற்கள் தளர்தல் மற்றும் பல்வலி.
- காது மற்றும் தொண்டைகளில் வலி.
- குரல் கரகரப்பு.
- விவரிக்க முடியாத எடை இழப்பு.
- சோர்வு மற்றும் பசியின்மை.
- பின் நாக்கு, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் புடைப்பு.
- நாக்கு அல்லது வாயின் உட்பூச்சில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் திட்டுகள்.
- இருமலுடன் இரத்தம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெரும்பாலும், புகையிலை உட்கொள்வது மிக முக்கியமான முதல் நிலை ஆபத்து காரணியாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகமாக மது அருந்துவதும் இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்திற்கு பங்களிக்கிறது. மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.
இந்த நோய் வருவதற்கான மற்ற முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- மனித பாபிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி) நோய்த்தொற்று.
- உதடுகள் புறஊதா கதிர்களுக்கு (சூரியன், சூரியவிளக்குகள்) வெளிப்படுதல்
- ரேடியோதெரபி மற்றும் கதிர்வீச்சுகளுக்கு ஏற்கனவே வெளிப்பட்டிருத்தல்.
- வெற்றிலை பாக்கு/வெற்றிலை மெல்லுதல்.
- ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்), கந்தக அமிலம் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்றவற்றிற்கு வெளிப்படுதல்.
- காஸ்ட்ரோ-ஓசோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பல் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிகுறிகள் மூலம் ஓரொபரிங்கியல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. புற்றுநோயின் வகையைப் பொறுத்து அதைக் கண்டறிய பல செயல்முறைகள் தேவைப்படலாம்:
- ஒருவரின் மருத்துவ வரலாறு மற்றும் ஆபத்துக் காரணிகள் பற்றிய ஆய்வுடன் சேர்ந்து உடல் பரிசோதனை.
- புண்களின் இடத்தைப் பொறுத்து எண்டோஸ்கோபி -லாரிங்கோஸ்கோபி/ஃபாரிங்கோஸ்கோபி/நாசோஃபாரிங்கோஸ்கோபி.
- ஓரல் பிரஷ் திசுப்பரிசோதனை.
- எச்.பி.வி பரிசோதனை.
- எக்ஸ்-கதிர்கள் சோதனை.
- பேரியம் விழுங்குதல்.
- கணிப்பொறி பருவரைவு (சி.டி அல்லது சி.ஏ.டி ஸ்கேன்).
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ ஸ்கேன்).
- அல்ட்ராசவுண்ட்.
- நேர்மின்னணு உமிழ் பருவரைவு அல்லது பி.இ.டி - சி.டி ஸ்கேன்.
நோயின் தன்மை, அதனுடைய நிலைப்பாடு, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சை முறைகள் முடிவுசெய்யப்படுகிறது. இந்நோய்க்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது:
- அறுவை சிகிச்சை - முதன்மை கட்டி அறுவை சிகிச்சை, நாக்கு நீக்கம் (நாக்கு அறுவைசிகிச்சை), ஒரு பகுதியாக அல்லது முழுமையாக தாடை எலும்பு நீக்கம் (கீழ்த்தாடை எலும்பு அறுவைசிகிச்சை), ஒரு பகுதியாக அல்லது முழுமையாக தசை பகுதி நீக்கம் (கன்ன எலும்பு அறுவைசிகிச்சை), கழுத்து பகுதி தொண்டை பகுதி அல்லது குரல்வளை நீக்கம் (குரல்வளை அறுவைசிகிச்சை). துளையிடும் அறுவைசிகிச்சைகளைத் தவிர, ட்ரான்சோரல் ரோபோடிக் அறுவை சிகிச்சை, ட்ரான்சோரல் லேசர் நுண்அறுவை சிகிச்சை போன்ற லேசாக துளையிடும் முறைகளும் உள்ளன.
- கதிர்வீச்சு சிகிச்சை - வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை, உட்புற கதிர்வீச்சு சிகிச்சை ஆகியன கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் ஆகும்.
- கீமோதெரபி.
- இம்முனோதெரபி - பெம்ரோலிசுமப், நிவோலும்ப் ஆகிய மருந்துகள் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இலக்கு சிகிச்சை - டார்கெட்டேட் தெரபியால் புற்றுநோயின் முக்கிய மரபணுக்கள் மற்றும் புரதங்கள் தடுக்கப்படுகிறது.
புற்றுநோயின் நிலையைப் பொறுத்து சிகிச்சையின் காலம் முடிவு செய்யப்படுகிறது. சிகிச்சை காலம் ஆறு வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம். புற்றுநோயின் சிகிச்சை மிகவும் விலையுயர்ந்தது, தோராயமாக 3.5 லட்சம் செலவாகும்.
புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்குகொள்ளும்போது பக்கவிளைவுகள் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு பாதுகாப்பு கொடுத்து அவர்களது உடலுக்கும், மனதிற்கும், சமூகத்தேவைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். இதைத்தவிர, வாழ்கை முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது, அதாவது குடி பழக்கத்தையும், புகையிலை பழக்கத்தையும் குறைத்துகொள்ளவேண்டும் அல்லது தவிர்க்கவேண்டும். சூரிய ஒளியில் நேரடியாக செல்வதை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவு, கொழுப்பு சத்து உள்ள உணவு, பொறித்த உணவு வகைகள் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.