ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
உடலின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்கு, உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து மிகவும் அவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்து உங்களுக்கு கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் போன்ற பேரளவு ஊட்டச்சத்துக்களில் இருந்து கிடைக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காத நிலையே ஊட்டச்சத்து குறைபாடு எனப்படுகிறது. இது ஒரு உலகளாவிய பிரச்சனை என்றாலும், நுண்ணலகு ஊட்டச்சத்து-குறைபாடுடன் வாழக்கூடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் தான் உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஊட்டச்சத்து குறைபாடானது பல ஊட்டச்சத்துக்களில் ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுவதாகும். எனவே, இதன் அறிகுறிகளும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஏற்றார் போல் தனித்துவம் வாய்ந்தது. உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை காணலாம். ஊட்டச்சத்து குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு.
- குறைஎடை.
- இரத்த சோகை.
- தசைப்பிடிப்பு.
- முடி கொட்டுதல்.
- வெளிறிய தோல்.
- வாய் புண்கள்.
- விரல்களில் உணர்வின்மை.
- மன நோய்.
- எளிதில் முறிகிற எலும்புகள்.
- மாலைக்கண் வியாதி அல்லது பார்வை இழப்பு.
- வலிப்பு.
- முன்கழுத்துக் கழலை.
- மலச்சிக்கல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- போதியளவு உணவு உட்கொள்ளாதுதல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள உணவுகளை உட்கொள்ளல்.
- உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் முழுமையற்ற உறிஞ்சுதல்.
- பெருங்குடல் புற்றுநோய்.
- குரோன் நோய்.
- சமநிலையற்ற பக்ரீரியா.
- வயிற்று நோய்த்தொற்று.
- செரிமான அமைப்பில் அழற்சி.
- மருந்துகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல நோய்கள் ஏற்படலாம், எனவே நோயறிதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். முதன்மையாக, நோயாளியின் மருத்துவ பின்புலம் அறியப்படுகிறது. அதற்குப்பின் பின்வரும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன:
- உடல் பரிசோதனை.
- உடல் நிறை குறியீட்டெண் அறிதல்.
- இரத்தத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் செறிவை அறியக்கூடிய இரத்தப் பரிசோதனை.
- மீயொலி (அல்ட்ராசவுண்ட்) பரிசோதனை.
ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை முறைகள் குறைபாட்டின் வகை கண்டறியப்படுவதை சார்ந்து இருக்கும். இதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வாய்வழியாக அல்லது அல்லூண்வழியாக வழங்கப்படும் ஊட்டச்சத்து பிற்சேர்க்கைகள்.
- இந்நோய் ஏற்படுவதற்கான அடிப்படை நிலையை அறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளித்தல் அவசியமாகும்.
- ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்.
பல ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆரம்ப நிலையில் கவனிக்கப்படாமல் முற்றிய நிலையை எட்டிய பிறகே கண்டறியப்படுகின்றன. நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியமாகும். எந்த அறிகுறிகளும் புறக்கணிக்கப்படக் கூடாது. சமச்சீரான உணவுத் திட்டம் மற்றும் ஊட்டச்சத்துமிக்க பிற்சேர்க்கைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீண்டு வரவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் தேசிய சுகாதார கொள்கைகளின் படி ஊட்டச்சத்துள்ள உணவுத் பொருட்களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் சமசீரான உணவு பழக்கங்கள் போன்றவை ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை தவிர்க்க உதவும்.