சுருக்கம்
ஒரு நோய்அறிகுறி(சின்ரோம்) என்பது ஒன்றோடொன்று தொடர்புடைய மருத்துவ அறிகுறிகளின் தொகுப்பு மற்றும் அது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது ஏதேனுமொரு கோளாறுடன் தொடர்புடையது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS -இர்ரிடபில் பௌவல் சின்ரோம்) என்பது சாதாரண மலக் குடல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு பெருங்குடல் குறைபாடு ஆகும். இந்த நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் சில வல்லுநர்கள் இதற்கு உடல் ரீதியான காரணங்களை விட முக்கியமாக இருப்பது மன ரீதியான காரணங்களே என நம்புகிறார்கள். இரத்த பரிசோதனை அல்லது இமேஜிங் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியாத காரணமில்லா வயிற்று வலியுடன் மலச்சிக்கல் முதல் வயிற்றுப்போக்கு வரை இதன் அறிகுறிகள் வேறுபடுகின்றன. நோயாளிகள் பல்வேறு அறிகுறிகளையும் அவற்றின் சிகிச்சை பலனையும் வெவ்வேறு விதமாக விவரிப்பதால், சிகிச்சை முறைகள் அறிகுறிகளைப் பொறுத்தும் அதனால் கிடைக்கும் நிவாரணங்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.