ஜெனிட்டல் ஹெர்பஸ் என்றால் என்ன?
ஜெனிட்டல் ஹெர்பஸ் என்பது ஹெர்பெஸ் என்ற வைரஸினால் ஏற்படும் ஒரு பொதுவான நோய் ஆகும். இது ஒரு பால்வினை நோய் (எஸ்.டி.டி). இந்நோய் முக்கியமாக பிறப்புறுப்புகள், ஆசனவாய் அல்லது வாய்வழி பகுதியை பாதிக்கிறது. இது மற்ற பால்வினை நோய் போன்று உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் நோய் அல்ல என்றாலும் இதனை நிரந்தரமாக குணப்படுத்தும் சிகிச்சைகள் எதுவும் இல்லை.
ஹெர்ப்ஸ் வைரஸினால் எச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸ் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தொற்று நோய் பற்றிய தகவல்களின் படி இந்தியாவில் இந்நோய் குறைவாகவே இருக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நோயாளிகள் முதலில் எந்த அறிகுறிகளையும் ஆரம்பத்தில் உணரமாட்டார்கள். ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது. இதன் முதல் அறிகுறி தொற்று ஏற்பட்ட 2 முதல் 10 நாட்களுக்குள் தெரியவரும். சில பொதுவான அறிகுறிகளாவன:
- காய்ச்சல்.
- தலைவலி.
- பலவீனம்.
- குமட்டல்.
- தசை வலி.
- பிறப்புறுப்புகள், ஆசனவாய், பிட்டம் அல்லது உதடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட திரவம் நிறைந்த கொப்புளங்கள் காணப்படுதல்.
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலான உணர்வு தோன்றுதல்.
- பிறப்புறுப்புகளில் வலி.
- யோனியிலிருந்து திரவ வெளியேற்றம்.
திரவங்களால் நிறைந்த கொப்புளம் உடைந்து, எந்த அடையாளமும் இன்றி ஒரு மேலடுக்கை உருவாக்கி குணமடைந்து விடும். இது தொற்று ஏற்பட்ட 15-லிருந்து 23 நாட்களுக்குள் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் தொற்றினால், சளிக்காய்ச்சல்-போன்ற அறிகுறிகள் இருக்காது மற்றும் புண்களும் குறைந்த வலியையே ஏற்படுத்தும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கொப்புளங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் மற்றும் சில வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஒவ்வொரு நபர்களுக்கும் இதன் அறிகுறிகள் மாறுபடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 1 (எச்.எஸ்.வி 1) மற்றும் எச்.எஸ்.வி 2. எச்.எஸ்.வி 2 வைரஸ் பிறப்புறுப்பு, ஆசனவாய் மற்றும் பிட்டத்தில் புண் ஏற்படுவதற்கான பொதுவான காரணம். வாய் பகுதிகளில் புண் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் எச் எஸ் வி 1 ஆகும்.
இந்த ஹெர்பெஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட புண்களிலிருந்து (யோனி, ஆசனவாய் அல்லது வாய் பகுதிகளிலும்) பாலியல் உறவின் போது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு புண்கள் இல்லை என்றாலும் கூட தொற்று பரவும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தாள், நீங்களும் உங்கள் துணையும் மருத்துவரை அணுக வேண்டும். வைரஸை அடையாளம் காண, மருத்துவர் முதலில் கொப்புளங்களிலிருந்து திரவ மாதிரிகளை சேகரிப்பார் (இருந்தால்). கொப்புளங்கள் காணப்படவில்லை எனில், பிறபொருளெதிரிகளை அடையாளம் காண பரிசோதனை மேற்கொள்ளப்படலாம்.
தொற்றின் தீவிரத்தை குறைக்கவும் அடிக்கடி தொற்று ஏற்படுவதை தடுக்கவும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். வலியிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய மருந்துகளையும் பரிந்துரைப்பார். துரதிருஷ்டவசமாக, இந்நோய்க்கு எந்த சிகிச்சைகளும் இல்லை, ஆனால் இந்நோய் பரவுவதை தடுக்க பின்வருவனவற்றை பயன்படுத்தலாம்.
- உடலுறவின் போது கருத்தடை உறைகளை உபயோகிக்க வேண்டும்.
- உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ புண்கள் இருப்பின் உடலுறவை தவிர்க்க வேண்டும்.
- பலருடன் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.