ஃப்ளு (இன்ஃப்ளுவென்ஸா) என்றால் என்ன?
ஃப்ளு (இன்ஃப்ளுவென்ஸா) என்பது இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவக்கூடிய ஒரு பொதுவான வைரஸ் தொற்றுநோய்.
உங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஃப்ளு தாக்கம் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் குளிர்காலத்திலேயே இதன் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, இதை பருவகால காய்ச்சல் என்றும் அழைப்பர். மூச்சுக்குழாயை பாதிக்கும் இரைபோ கருவமிலம் (ஆர்.என்.ஏ) வைரஸ் மூலம் இந்நோய் உண்டாகிறது. சளி போன்ற மூச்சுமேற்சுவடு தொற்றினை ஒப்பிடும்பொழுது இன்ஃப்ளுவென்ஸா தொற்றானது 0.1% இறப்பு விகிதத்தைக் கொண்ட கடும் நோயினை ஏற்படுத்தும். பெரும்பாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இன்ஃப்ளுவென்சா குணமாகிவிடும்.
5 வயதிற்குற்பட்ட குழந்தைகள், 65 வயதை கடந்த பெரியவர்கள் இன்ஃபுளுவென்சா வைரசால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளனர். கருத்தரித்த பெண்கள், குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள், சுகாதார மையங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் நாள்பட்ட சுவாச நோய் உடையவர்களுக்கு இன்ஃப்ளுவென்சா நோய் நோய்தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஆரம்பத்தில் ஃப்ளு சாதாரண சளியைப் போன்றே இருக்கும் .இதற்கான பொதுவான அறிகுறிகள் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல் ஆகும். இதற்கும் சளிக்கும் உள்ள பெரிய வேறுபாடு ஃப்ளு சளியை விட வேகமாக வளரும் என்பதே ஆகும். நோய்த்தொற்று ஏற்பட்டு ஒன்று முதல் மூன்று நாட்களில் அறிகுறிகள் தெரியும். பொதுவாக ஒரு வாரத்திற்குள் மக்கள் நன்றாகிவிடுவார்கள்.
ஃப்ளு நோயின் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுளளன:
- 38C (100.4F) அல்லது அதற்கு மேலே உள்ள திடீர் காய்ச்சல்.
- தொண்டை வலி அல்லது கரகரப்பு.
- பசியின்மை.
- தலைவலி.
- வறட்டு இருமல்.
- வயிற்றுப்போக்கு.
- குமட்டல்.
- மூக்கடைப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஃப்ளு தொற்றை ஏற்படுத்தும் இன்ஃப்ளுவென்சா வைரஸில் மூன்று வகை உள்ளன - இன்ஃப்ளுவென்சா ஏ, பி மற்றும் சி. ஏ மற்றும் பி வகை வைரஸ் சுவாசக்குழாயின் கடுமையான தொற்றுக்கு காரணமாகின்றன.இது சி வகையை ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் அதிகம் உள்ள பெருவாரியாக பரவுகிற நிலைமைக்கு வழிவகுக்கிறது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தும்முதல், இருமுதல் மற்றும் பேசுதல் மூலம் பரவும். சில நேரங்களில் நோய்த்தொற்றுள்ள துளிகளை நீங்கள் நேரடியாக சுவாசித்துவிடுவீர்கள். வைரஸ் தொற்று பரவியுள்ள இடங்களை தொடுவதாலும் இந்நோய் பரவும். பாதிக்கப்பட்ட நபர் இநோயின் முதல் அறிகுறிகள் தெரிவதற்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே நோயைப்பரப்பும் தன்மை உடையவராகிறார்.
இன்ஃப்ளுவென்சா வைரஸ் தொடர்ந்து காலப்போக்கில் மாற்றங்களுக்கு உள்ளாகும். அதாவது பிறழ்வுகளுக்கு உள்ளாகும். இது உங்கள் வாழ்நாள் முழுவதிலும் உங்களை வைரஸ் நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாக்குகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் நீர்ச்சத்து குறையாமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். உங்கள் மருத்துவர் பாலிமரேசு தொடர் வினையை (பி.சி.ஆர்) சோதிக்க உங்கள் சுவாச ரீதியான மாதிரிகளை சேகரிப்பார், விரைவான பிறபொருளெதிரியாக்கி சோதனை, நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு மதிப்பீடு போன்றவற்றை மேற்கொள்வார்.
பிறகு உங்கள் மருத்துவர் வைரஸ் எதிர்மருந்துகளை பரிந்துரை செய்வார். இந்த மருந்துகள் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
காய்ச்சலையும், உபாதைகளையும் குறைக்க காய்ச்சலடக்கி மற்றும் அழற்சி-எதிர்ப்பு மருந்துகள் மூலம் அறிகுறிசார் சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். பாதிக்கப்பட்டிருப்பது குழந்தை எனில் தாய்ப்பால் அதிகம் கொடுக்கப்பட்டு குழந்தையின் உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.