குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் என்றால் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் என்பது மிகவும் சகஜமான ஒன்று மற்றும் இது அசாதாரணமான குடல் இயக்கங்களையும் கடுமையான மலத்தினையும் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இது தீவிரமான நிலைமை கிடையாது என்றாலும், மலச்சிக்கலினால் உருவாகும் வலியிலிருந்து தப்பிக்க குழந்தைகள் குடல் இயக்கத்தினை கட்டுப்படுத்த முனையும் போது இது நீண்டகால தொந்தரவாக மாறலாம். நாள்பட்ட மலச்சிக்கலுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை, ஏனென்றால் அவை தீவிர மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குழந்தைகளுக்கான மலச்சிக்கலின் அறிகுறிகள் பின்வருமாறு:
- ஒரே வாரத்தில் மூன்று முறைக்கும் கம்மியாக கழிவு வெளியேற்றுதல்.
- எளிதாக வெளிவராத உலர்ந்த மற்றும் கடினமான மலம்.
- கழிவறையில் வெளித்தள்ள முடியாத அளவிற்கு பெரிய மலக்கழிவு.
- மலம் கழிக்கும்போது வலி.
- வயிற்று வலி அல்லது பிடிப்புகள்.
- மலத்தில் இரத்தம்.
- குழந்தைகளின் உள்ளாடைகளில் உலர்ந்த மலத்தின் தடயங்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் இருப்பினும், இதில் சில விஷயங்கள் எளிதாக தவிர்க்கப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம். அவை பின்வருமாறு:
- மலச்சிக்கலுக்கான குடும்ப வரலாறு.
- செரிமான அமைப்பின் பிறப்பு குறைபாடுகள் அல்லது மருத்துவ காரணங்கள்.
- சகிக்க முடியாத அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தும் சில உணவுகள்.
- சில மருந்துகளின் பக்க விளைவுகள்.
- உணவு அல்லது வழக்கமான செயல்களில் மாற்றங்கள்.
- கழிப்பறை பயிற்சியின் போது ஏற்படும் சிக்கல்கள்.
- வேண்டுமென்றே மலத்தை நிறுத்தி வைப்பது.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
குழந்தையின் நோயறிதலுக்கு உடல் பரிசோதனையுடன் கூடிய மருத்துவ வரலாறு போதுமானதாக இருக்கிறது. அசாதாரண மாற்றங்களை சோதிக்க மருத்துவர்கள் கையுறையிட்ட விரலை ஆசனவாய் வழியாக நுழைக்கலாம். மலத்தினையும் பரிசோதனை செய்யலாம். பல சந்தர்ப்பங்களில், வயிற்றில் எக்ஸ்-கதிர்கள் சோதனை, மலக்குடல் திசுப் பரிசோதனை, குறியீட்டு சோதனை அல்லது இரத்த பரிசோதனை ஆகியவை செய்யப்படலாம்.
உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் தான் சிகிச்சையின் முதல் படி ஆகும். உணவில் நிறைய நார்ச்சத்துக்கள் சேர்த்துக்கொள்ளுவது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது போன்றவை குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்த உதவி செய்யும். மலத்தை எளிதாக வெளியேற்ற மலமிளக்கியை மருத்துவர்கள் சில நேரங்களில் பரிந்துரைப்பார்கள். எனிமா (மல துவாரத்தின் வழியாக நீர் ஏற்றி மலத்தை வெளியேற்றுதல்) அல்லது மலமிளக்கி மருந்துகள் எந்த குறுக்கீடும் இல்லாமல் மலம் கழிக்க பயன்படுகின்றன. சில நேரங்களில், குழந்தைக்கு மலச்சிக்கல் மிகவும் கடுமையாக இருந்தால் உடனே உடனடியாக மருத்துவமனையில் எனிமா கொடுக்கப்படலாம்.