மூளை காயம் என்றால் என்ன?
இறப்பு அல்லது செயலிழப்பிக்கு வழிவகுக்கும், மூளைஅணுக்களில் ஏற்படும் ஏதாவது ஒரு சேதமே, மூளை காயம் என்று குறிப்பிடப்படுகிறது. வெளிப்புற காயம் அல்லது உள் காரணிகளால் இது நிகழலாம். மூளை அனைத்து உடல் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாட்டு மையமாக இருப்பதால், மூளையில் ஏற்படும் எந்த ஒரு காயமும் உடலின் செயல்பாட்டை பாதிக்கலாம். மூளை காயம் பிறக்கும் போதே (பிறவி சார்ந்த/பிறவியோடு உண்டான) இருக்கலாம் அல்லது பிறகு பெறப்படலாம். அதன் தீவிரத்தன்மையின் அடிப்படையில், மூளை காயம் லேசானதாக, மிதமானதாக அல்லது கடுமையானதாக இருக்கலாம், மேலும் பெரும்பாலும் இது மரணத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பாதிப்புக்கு உள்ளான மூளை பகுதியின் அடிப்படையில், மூளை காயத்தின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகளை பரவலாக மூளையின் மூலம் பகுக்கும் தருக்க அறிவு/அறிவாற்றல், நடத்தை, புலனுணர்வு மற்றும் உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
அறிவாற்றல் சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- புரிந்துணர்தலில் சிரமம்.
- சிந்தனை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமம்.
- கவனம் பற்றாக்குறை.
- மோசமான முடிவெடுக்கும் தன்மை.
- நினைவக இழப்பு.
நடத்தை சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- எளிதில் சீற்றம் கொள்கிற பண்பு.
- கிளர்ச்சி மற்றும் வன்தாக்கம்.
- குறைந்த மன அழுத்தம் சகிப்புத்தன்மை.
- சுருசுருப்பின்மை / மந்தம்.
- தட்டையான உணர்வுகள்.
புலனுணர்வு சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- பார்வை, கேட்டல் அல்லது தொடுதல் உணர்வுகளில் மாறுதல்.
- தன்னிலையிழத்தல்.
- சுவை மற்றும் வாசனையில் மாற்றங்கள்.
- சமநிலையில் சிரமம்.
- குறைந்த வலி குறுமட்டம்/தாங்கக்கூடிய அளவு.
உடல் சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி.
- களைப்பு/சோர்வு.
- பக்கவாதம்.
- நடுக்கம் மற்றும் வலிப்புத்தாக்கங்கள்.
- ஒளியச்சம் (ஒளி உணர்திறன்).
- தெளிவற்ற பேச்சு.
- உணர்வு இழப்பு.
- தூக்கத்தின் போது தொந்தரவு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மூளை திசு ஆக்சிஜன் குறைபாடு/ஹைப்போக்ஸியா (திசுக்களில் குறைந்த அளவில் ஆக்ஸிஜன் இருத்தல்) ஏற்படுத்தக்கூடிய வகையில் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராணவாயு) வழங்குதல் நிறுத்தப்படும் போது, மூளை காயம் ஏற்படுகிறது. காரணங்கள் புற மற்றும் உள் காயம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
வெளிப்புற (அதிர்ச்சிகரமான) காயங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- விழுவது.
- வாகனத்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் காயம்.
- விளையாடும் போது ஏற்படும் காயங்கள்.
- தலையில் அடிபடுதல்.
உள் காயங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- பக்கவாதம்.
- கட்டி.
- குருதி நாள நெளிவு (மூளையில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் குறைபாடு).
- நோய்த்தொற்று.
- நச்சேற்றம்.
- மருந்து முறைகேடு/தவறான மருந்து பயன்பாடு.
- நரம்பியல் நோய்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
ஒரு விரிவான மருத்துவம் சார்ந்த நோய் வரலாறு மற்றும் உடல் பரிசோதனை மூளை காயம் நோயை கண்டறிவதில் உதவி புரிகின்றது. எவ்வாறாயினும், காயத்தின் பாதிப்பு, தீவிரத்தன்மை மற்றும் நோய்முடிவு முன்கணிப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ள சில ஆய்வுகள் மேற்கொள்வது கட்டாயமாகும். இந்த சோதனைகள் பின்வருமாறு:
- கணிப்பொறி பருவரைவு (சி.டி) ஸ்கேன்: இது மூளை காயம் சந்தேகிக்கப்படும் போது, முதலாவதாக மேற்கொள்ளப்படும் கதிரியக்க சோதனை ஆகும். இது மண்டை எலும்பு முறிவுகள், இரத்தப்போக்கு, இரத்தக் கழலை மற்றும் திசு வீக்கம் ஆகியவற்றைக் கண்டறிவதில் உதவுகிறது.
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன்: இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் சி.டி ஸ்கேனுடன் ஒப்பிடும்போது சிறப்பான துல்லியம் உடையதாகும். இது மூளை மற்றும் அதன் பல்வேறு பகுதிகளை விரிவான முறையில் சோதனை செய்ய உதவுகிறது.
கிளாஸ்கோ கோமா அளவுகோல், மூளை காயத்தின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதிக புள்ளி அளவுகள் சற்று குறைவான காயங்களைக் குறிக்கின்றன மற்றும் குறைந்த புள்ளி அளவுகள் கடுமையான காயத்தைக் குறிக்கின்றன.
மூளை காயத்திற்கான சிகிச்சை முக்கியமாக அதன் தீவிரத்தை சார்ந்துள்ளது. ஒரு லேசான காயத்திற்கு பொதுவாக அறிகுறிகளின் கவனிப்பு மட்டுமே போதுமானது மற்றும் எந்த சிகிச்சையும் அளிக்கவேண்டிய தேவையில்லை. மறுபுறம், மிதமான மற்றும் கடுமையான காயங்களுக்கு எளிய மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரையிலான கடுமையான சிகிச்சை தேவைப்படுகிறது.
மூளை காயத்திற்கான மருந்துகள் பின்வருமாறு:
- வலிப்புத்தாக்கத்தை எதிர்க்கும் மருந்துகள் - வலிப்புத்தாக்கங்களே மூளை காயத்தின் பொதுவான அறிகுறியாகும், இது மேலும் மூளைக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால், வலிப்புத்தாக்கத்திற்கு எதிரான மருந்துகள், மூளை காயத்திற்கான சிகிச்சையில் பெரும் உதவியாக உள்ளன.
- நீர்ப்பெருக்கிகள் - சில வகையான மூளை காயங்கள் மூளையை சுற்றி வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீர்ப்பெருக்கிகளின் பயன்பாடு இந்த வீக்கத்தை குறைக்கவும் அழுத்தம் சார்ந்த அறிகுறிகளைத் தடுக்க உதவும்.
- ஆழ்மயக்கம்/கோமாவை-தூண்டும் மருந்துகள் - மூளை தன்னைத்தானே மீட்க முயற்சிக்கும் போது, கூடுதல் பிராணவாயுவைப்/ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. எனினும், இரத்த நாளங்கள் அழுத்தப்பட்டால் அல்லது சேதமடைந்தால், அதற்க்கு போதுமான ஆக்சிஜென் கிடைக்காது, இது மூளையணுக்களை மேலும் காயமடையச் செய்வதோடு மூளையணுக்களின் செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு, மூளையணுக்களின் ஆக்ஸிஜன் தேவையை குறைக்க மற்றும் மூளையணுக்களின் செயல்பாட்டிற்கு கோமாவை-தூண்டும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூளை காயத்திற்கான அறுவை சிகிச்சை பல நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது, அவை பின்வருமாறு:
- மண்டை எலும்பு முறிவை சரி செய்தல்.
- மூளையிலிருந்து இரத்த உறைவை அகற்றுதல்.
- இரத்தம் வழிகின்ற இரத்த நாளங்களை தைத்து இணைத்தல்.
- அழுத்தத்தில் இருந்து விடிவு பெற மண்டையோட்டில் ஒரு சாளரத்தை உருவாக்குதல்.
அறுவைசிகிச்சை மற்றும் மருந்துகளை தவிர, மூளை செயல்பாடு மற்றும் மூளை சேதத்தால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த மறுசீரமைப்பு அவசியமானதாகும். உடலியல் மருத்துவம்/உடற்பயிற்சி சிகிச்சை, தொழில்வழி சிகிச்சை, ஆலோசனை/கருத்துரை வழங்கல் மற்றும் பொழுதுபோக்கு சிகிச்சை ஆகியவற்றை மறுசீரமைப்பு உள்ளடக்கியுள்ளது.