எலும்பு மெட்டாஸ்டாஸிஸ் என்றால் என்ன?
மெட்டாஸ்டாசிஸ் என்பது உடலின் ஒரு பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவும் நிலையாகும். இது எலும்புகளுக்கு பரவும்பொழுது, எலும்பு மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, மார்பக புற்றுநோய் அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் எலும்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. எலும்பு மெட்டாஸ்டாசிஸ் தாக்கக்கூடிய மிகவும் பொதுவான இடங்கள் முதுகெலும்பு, தொடையெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் ஆகும். நுரையீரலைப் போலவே, எலும்புகளும் தீவிரமடைந்த மெட்டாஸ்டாஸிஸ்க்கான இடங்களாகும். பொதுவாக எலும்பு மெட்டாஸ்டாசிஸ் மிக தீவிரமடைந்த நோயைக் குறிக்கிறது மற்றும் இந்த நோயை குணப்படுத்த முடியாது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சில நேரங்களில், எலும்பு மெட்டாஸ்டாசிஸ் எவ்வித தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளையும் காட்டுவதில்லை. அறிகுறிகள் ஏற்படும் போது, அவை பாதிக்கப்பட்ட எலும்புடன் தொடர்புடையதாக இருக்கும்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட எலும்பைதவிர்த்து, எலும்பு மெட்டாஸ்டாசிஸ்க்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவை பின்வருமாறு:
- எலும்பு வலி.
- பாதிக்கப்பட்ட எலும்பில் முறிவு.
- சிறுநீர் மற்றும் குடல் இயக்கங்களின் கட்டுப்பாட்டை இழத்தல்.
- கால்கள் அல்லது மேற்கைகளில் பலவீனம் அல்லது வலி.
- ஹைபர்கால்செமியா (எலும்பு உடைவதினால் ஏற்படும் அதிகமான இரத்தக் கால்சியம் அளவு) ஏற்படும் அறிகுறிகள்:
- குமட்டல்.
- மலச்சிக்கல்.
- மன குழப்பம்.
- வலிப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் அல்லது நிணநீரில் நுழையும் போது, அவை தொலைதூர உறுப்புகளுக்கு சென்று அவற்றைப் பாதிக்கின்றன. இந்த புற்றுநோய் செல்கள் எலும்புக்குள் நுழைந்து எலும்பின் உள்ளே பெருக ஆரம்பிக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது, அவை ஒட்டுண்ணி ஆகி, எலும்பில் இருக்கும் ஊட்டச்சத்தை எடுத்துகொண்டு, பாதிக்கப்பட்ட எலும்பை வலுவற்றதாக மாற்றுகிறது.
எலும்புகளுக்கு பரவக்கூடிய பொதுவான புற்றுநோய்கள்:
- மார்பக புற்றுநோய்.
- புரோஸ்டேட் புற்றுநோய்.
- சிறுநீரக புற்றுநோய்.
- நுரையீரல் புற்றுநோய்.
- நிணநீர் உயிரணுப்புற்றுநோய்.
- தைராய்டு புற்றுநோய்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை பாதிக்கப்பட்ட எலும்பை கண்டறிய உதவுகிறது. எலும்பு மெட்டாஸ்டாசிஸில் நோயைக் கண்டறிய, இரத்த பரிசோதனைகள் எப்போதாவது பயன்படுத்தப்படுகின்றன; இறுதி முடிவை எடுப்பதற்கு இயல்நிலை வரைவு (இமேஜிங்) பயன்படுகிறது. இந்த இயல்நிலை வரைவு (இமேஜிங்) முறைகள் பின்வருமாறு:
- எக்ஸ்-கதிர்கள்.
- எலும்பு ஸ்கேன்.
- கணிப்பொறி பருவரைவு ஸ்கேன் (சி.டி ஸ்கேன்).
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஸ்கேன்.
- நேர்மின்னணு உமிழ் பரு வரைவு (PET) ஸ்கேன்.
சிகிச்சையின் நோக்கம், வலியைக் குறைத்தல், எலும்பு முறிவுகளை தவிர்த்தல் மற்றும் பிற எலும்புகளுக்கு பரவுவதை தவிர்ப்பது ஆகும்.
எலும்பு மெட்டாஸ்டாசிஸ்க்கு பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- கீமோதெரபி காரணிகள் - இந்த மருந்துகள் புற்றுநோய் அணுக்களை சுருக்க பயன்படுகிறது.
- ஹார்மோன் சிகிச்சை - ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தும் ஆண்ட்ரோஜென் குறைப்பு சிகிச்சை போன்ற முதன்மை புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் முறிந்த எலும்புகளை சரிசெய்ய பயன்படும் பாராதைராய்டு ஹார்மோன் போன்ற ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
- இலக்கை நோக்கிய சிகிச்சைகள்.
- நோய்தடுப்பாற்றல் சிகிச்சை - இது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு இம்யுனோக்ளோபுலின்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டல செல்களை பயன்படுத்துகிறது.
- பிஸ்ஃபோஸ்ஃபோனேட் - இது எலும்பு வலியை குறைப்பது, இரத்தக் கால்சியம் அளவைக் குறைப்பது, முறிவின் ஆபத்தை குறைப்பது, மற்றும் எலும்புகள் சேதத்தின் வேகத்தை குறைப்பது போன்ற அறிகுறி தொடர்பான நிவாரணத்தை அளிக்கிறது.
- கதிர்வீச்சு சிகிச்சை - பாதிக்கப்பட்ட எலும்புகளை ஸ்ட்ரோண்டியம் - 89 மற்றும் ரேடியம் - 223 போன்ற ரேடியோ ஐசோடோப்புகள் கதிர்வீசிகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.