இரத்தப்போக்கு என்றால் என்ன?
உடலிலிருந்து இரத்த இழப்பு ஏற்படுவது இரத்தப்போக்கு எனப்படும். இரத்தப்போக்கு உடலினுள் ஏற்பட்டால் அதனை உள் இரத்தப்போக்கு என்றும் அதுவே உடலுக்கு வெளியில் ஏற்பட்டால் அதனை வெளி இரத்தப்போக்கு என்றும் கூறுவர். நம் உடம்பில் மூடப்பட்ட இரத்த நாளங்கள் வழியே இரத்தம் செல்கிறது; அந்த இரத்த நாளங்களில் ஏதாவது வெட்டு அல்லது ஓட்டை ஏற்பட்டால் அதிலிருந்து இரத்தம் வெளியே வந்து இரத்த இழப்பை உண்டாக்கும். ரத்தப்போக்கு காயம் அல்லது உள்ளார்ந்த நோய் அறிகுறிகளாக இருக்கலாம்.மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் ரத்தப்போக்கு இயல்பான நிகழ்வுகள் ஆகும்.
இரத்தப் போக்கின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் என்ன?
இரத்தப்போக்கு மருத்துவ நிலை அல்லது காயத்தினால் ஏற்படும்போது அது கவலைப்பட வேண்டிய விஷயமாகும். நம் உடம்பில் இயல்பாகவே இரத்தம் உறையும் தன்மை உள்ளது. காயத்தினால் இரத்தப்போக்கு ஏற்படும் போது இரத்தம் உறைவதில் கோளாறு இல்லாத பட்சத்தில் இயல்பாகவே இரத்தம் உறைந்து விடும். இரத்தப் போக்கிற்கான பொதுவான சில அறிகுறிகளை கீழ்வருமாறு காணலாம்.
- வாய், மூக்கு, காது, ஆசனவாய் மற்றும் சிறுநீர் குழாய் அல்லது வெளிப்புற தோளிலிருந்து இரத்த இழப்பு ஏற்படுவது.
- காய்ச்சல்.
- இரத்த சிவப்பணு நிறமி குறைதல்.
- அதிர்ச்சி (ரத்தப்போக்கு நிக்காத பட்சத்தில்) குளிர்ச்சி, வெளிர்ந்த கை கால்கள், குறைந்த நாடித்துடிப்பு போன்ற பண்புகளுடன் காணப்படும்.
இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
உடம்பில் ஏற்படும் காயம், விபத்தினால் ஏற்படும் காயம் அல்லது அடிபட்டாலோ இரத்தப்போக்கு ஏற்படலாம். சில பொதுவான காரணங்கள் கீழ்வருமாறு:
- காயம், சிராய்ப்பு அல்லது தோல் சிதைவு ஆகிய காரணங்களினால் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
- மூக்கில் ஏற்படும் காயம் அல்லது மூக்கை நோண்டுவதால் மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
- தலையில் ஏற்படும் காயத்தால் மண்டை ஓட்டிற்குள் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
- துப்பாக்கி சூட்டால் ஏற்படும் காயம்.
மருத்துவ நிலையின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதனை மருத்துவ காரணம் என்று குறிப்பிடுவர். அதற்கான சில காரணங்கள்:
- கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி.
- கல்லீரல் செயலிழப்பு.
- குறைந்த இரத்தவட்டுக்கள் எண்ணிக்கை.
- வைட்டமின் கே குறைபாடு.
- இரத்தப் புற்றுநோய் அல்லது ஏதாவது ஒரு முற்றிய புற்றுநோய்.
- மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப் போக்கு.
- கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு.
- இரத்தம் உறையா நோய்-மரபணு குறைபாடு காரணமாக மூட்டுக்களில் திடீரென ஏற்படும் இரத்தப் போக்கு.
இரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் மாத்திரைகள் கூட சில சமயங்களில் ரத்தபோக்கு ஏற்படுத்தும்.
இரத்தப் போக்கை எப்படி கண்டு பிடிப்பது மற்றும் அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது?
காயம் ஏற்பட்டால் காயம்பட்ட உறுப்புகளை பல்வேறு ஆராய்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் இரத்தப்போக்கை கண்டறியலாம். நிறைய நேரங்களில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளாதபோது இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியாமல் விடப்படுகிறது. சில பொதுவான கண்டறியும் கருவிகள் மற்றும் முறைகளை கீழ்வருமாறு காணலாம்:
- ஹீமோகுளோபின் மற்றும் ஹெமாடோக்ரிட் அளவை கண்டறியும் ரத்தப் பரிசோதனை.
- இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை.
- மல பரிசோதனை.
- ஊடுகதிர் பரிசோதனை.
- சி.டி ஸ்கேன்.
- ஊடொலி ஆய்வு.
முதற்கட்டமாக இரத்தப்போக்கை நிறுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். இரத்தப்போக்கு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்தபின் அதற்கேற்றார்போல் சிகிச்சை முறை வடிவமைக்கப்படும். ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:
- மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப் போக்கை சரி செய்ய ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படும்.
- காயத்தினால் ஏற்படும் இரத்த இழப்பை கட்டுப்படுத்த குருதி தடுப்பு கருவி (ரத்த நாடியை இறுகக் கட்டும் கருவி) பயன்படுத்தப்படும்.
- அறுவை சிகிச்சையின் மூலம் காயத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
- திசு ஆக்சிஜனூட்டம் மற்றும் நரம்புகளின் வழியாக செலுத்துவதன் மூலம் ரத்தப்போக்கு ஏற்படும் தாழ்ந்த குருதி அழுத்த நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
- அறுவை சிகிச்சை: இரத்தப் போக்கை நிறுத்தும் பொருட்கள் கொண்ட கொலாஜன், பைபிரின் மற்றும் ஜெலட்டின் கொண்டு ரத்தப்போக்கை நிறுத்துவர்.
- குருதிநாள இறுக்க மருந்து: புற்றுநோய் காரணமாக சிறுநீர்ப்பை அல்லது மலக்குடலில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் நரம்புச் சுருக்க மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.இதில் ரத்தப்போக்கு ஏற்படும் இடத்தில் மருந்தை செலுத்துவதன் மூலமும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
- கதிர்வீச்சு சிகிச்சை: நுரையீரல்புற்றுநோய் ,சிறுநீர்ப்பை மற்றும் உணவுக் குடல் புற்றுநோய்களால் ஏற்படும் ரத்த இழப்பை இந்த கதிர்வீச்சுத் சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம்.
- வைட்டமின் கே சிகிச்சை மற்றும் கரையக்கூடிய புரதம் மூலம் இரத்த உறைதல் கோளாறை சரி செய்யலாம்.
- ஆன்டிஃபைபிரினோலிடிக்ஸ் மூலம் இரத்தம் உறைதலை மேம்படுத்தலாம்.
- இரத்தம் அல்லது ரத்த அணுக்களை எடுத்துச் செல்லும் நிறமற்ற திரவம் அல்லது இரத்த தட்டுக்களை பிறிது குருதியேற்றலாம்.
உடம்புக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது ஆகும்.அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும்போது ஆகும் இரத்த இழப்பை ஈடுகட்ட ரத்தம் ஏற்றலாம்.
எச்சரிக்கை-எந்தவிதமான ரத்தபோக்காக இருந்தாலும் அதற்கு உடனடி கவனம் தேவை. சரியான நேரத்தில் மருத்துவரை நாடி அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சையும் எடுத்துக் கொள்வது உங்கள் உயிரை காப்பாற்றும்.