இலயமின்மை (இதயம் தொடர்ச்சியற்று துடித்தல்) என்றால் என்ன?
இலயமின்மை என்பது இதயத்தின் ஒழுங்கற்ற துடிப்பை குறிக்கிறது. பெரியவர்களுக்கு, சாதாரணமாக ஓய்வெடுக்கும் நிலையில், இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிப்புகள் வரை இருக்கும். இலயமின்மை உள்ளவர்களுக்கு சாதாரண வீதத்தை விட குறைவாகவோ, அதிகமாகவோ அல்லது ஒரு ஒழுங்கற்ற வடிவையோ கொண்டிருக்கும். பல்வேறு வகையான இலயமின்மைகள் உள்ளன, அவற்றில் மிகவும் பொதுவான ஒன்று, ஏட்ரியல் குறுநடுக்கம். இந்த நிலையில் இதய துடிப்பானது இயல்பை விட ஒழுங்கற்றதாகவும் வேகமானதாக இருக்கும்.
இதயத்துடிப்பு இயல்பை விட வேகமானதாக இருந்தால், அது மிகை இதய துடிப்பு (நிமிடத்திற்கு>100 துடிப்புகள்) என அறியப்படுகிறது. சாதாரண விகிதத்தைவிட இதயத்துடிப்பு மெதுவாக இருந்தால், அது குறை இதயத் துடிப்பு (நிமிடத்திற்கு <60 துடிப்புகள்) என்று அழைக்கப்படுகிறது.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
பல்வேறு வகையான இலயமின்மையின் அறிகுறிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படலாம்.
இலயமின்மையின் அறிகுறிகள், மிகை இதய துடிப்பில் பின்வருமாறு:
- டிஸ்ப்னியா (மூச்சு விடுதலில் இடர்ப்பாடு).
- தலைச்சுற்றல்.
- நெஞ்சு வலி.
- தலை லேசாக உணர்தல்.
- திடீர் பலவீனம்.
- மயக்கம்.
- மார்பில் ஒரு அதிர்வு உணர்ச்சி அல்லது படபடப்பு (நெஞ்சு படபடப்பு).
இலயமின்மையின் அறிகுறிகள், குறை இதய துடிப்பில்:
- குழப்பம்.
- நெஞ்சு படபடப்பு.
- வியர்வை.
- சோர்வு.
- உடற்பயிற்சி செய்வதில் சிரமம்.
- மூச்சு திணறல்.
இலயமின்மையின் முக்கிய காரணங்கள் யாவை?
இதய திசுக்களில் நடக்கும் அசாதாரண மாற்றங்கள் விளைவாக இலயமின்மை ஏற்படுகிறது. இது பொதுவாக ஒரு தூண்டுதலால் ஏற்படுகிறது, சில நபர்களில், காரணம் தெரியாமல் கூட இருக்கலாம். இலயமின்மைக்கான காரணங்கள்:
- இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் குறைவு, இதயத்திசுக்களின் இறுக்கம் அல்லது வடு போன்ற அசாதாரண மாற்றங்கள்.
- உற்சாகம் மற்றும் உணர்ச்சியினால் ஏற்படும் மன அழுத்தம், இரத்த அழுத்தத்தை அதிகரித்து மற்றும் மன அழுத்தத்திற்கான ஹார்மோன்களை தூண்டியும் இலயமின்மைக்கு வழிவகுக்கும்.
- இரத்த ஓட்டத்தில் மின்பகுளிகள், ஹார்மோன்கள் அல்லது திரவங்களின் ஏற்றத்தாழ்வு இதயத்துடிப்பு விகிதத்தில் விளைவை ஏற்படுத்தும்.
- உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் சில நேரங்களில் இலயமின்மையை ஏற்படுத்தும்.
அதிக வயது, குடும்ப வரலாறு மற்றும் மரபியல் போன்ற காரணிகள் இலயமின்மைக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோயைக் கண்டறிய, நோயாளியின் குடும்ப வரலாறு, உடல்ரீதியான செயல்பாடு, மற்றும் பிற காரணிகளைப் பற்றி மருத்துவர் விசாரிப்பார்.
இதனைத் தொடர்ந்து, நாடித்துடிப்பு, இதயத் துடிப்பு, மற்ற நோய் அறிகுறிகள் போன்றவற்றை கண்டறியும் உடல் பரிசோதனை நடைபெறும்.
பிற பரிசோதனைகள் பின்வருமாறு:
- இரத்த சோதனைகள் - மின்பகுளிகள், லிப்பிடுகள்(கொழுப்பு), ஹார்மோன்களின் அளவை மதிப்பிடுகின்றன.
- இதயத் துடிப்பு, அதன் வீதம், தாளம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி).
- எக்கோகார்டியோகிராபி (இதயத்தின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்).
- உடலின் பல்வேறு பகுதிகளின் அல்ட்ராசவுண்ட் - பிற நோய்களை தவிர்ப்பதற்காக.
இலயமின்மைக்கான சிகிச்சையை சிறப்பாக நிர்வகிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை. இதய துடிப்பை நிலைப்படுத்த, பீட்டா பிளாக்கர்கள் அல்லது அடினோசைன்கள் போன்ற மருந்துகள் மற்றும் இரத்த மெலிவூட்டி போன்ற மருந்துகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், இதயமுடுக்கி மற்றும் உள்வைக்கக்கூடிய கார்டியோவர்டர் டிஃபைபிரிலேட்டர்ஸ் போன்ற சாதனங்கள் பயன்படுத்தி இதய துடிப்பை கட்டுப்படுத்தலாம்.